“சௌதி அரேபியாவில் தீவாவளி கொண்டாட்டம்..! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், பாப்புலர் பிரண்ட் அப்பள கம்பெனி… போன்ற முஸ்லிம் மதவெறி கும்பல்கள் எங்கிருந்தாலும் மேமைக்கு வரவும்..!” என்ற கேப்ஷனுடன் கட்டிடங்களுக்கு மத்தியில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்படுவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் தகவல் தவறானது என்றும் அது சவுதி அரேபியாவில் தேசிய தினம் கொண்டாடப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொலி என்றும் தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Pintu Tiwari Gkp என்ற இன்ஸ்டாகிராம் பயனர் அதே காணொலியை பதிவிட்டுள்ளார். அதில், “சவுதி அரேபியாவின் தேசிய தின இரவை கொண்டாடுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தேடுகையில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி இதே காணொலியை, "சவுதியின் தேசிய தினம்" என்று Wpid என்ற யூடியூப் சேனல் இதே காணொலியை வெளியிட்டுள்ளது. மேலும், கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி Jannatul Islam Moni என்ற எக்ஸ் பக்கத்திலும், "சவுதி அரேபியாவின் ரியாத்தில் எடுக்கப்பட்ட காணொலி" என்று பதிவிடப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, சவுதி அரேபியாவின் 94வது தேசிய தினம் கொண்டாட்டத்தின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது என்று செப்டம்பர் 23ஆம் தேதி Gulf News செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக சவுதி அரேபியாவில் வானவேடிக்கையுடன் தீபாவளி கொண்டாடப்பட்டதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அது சவுதி அரேபியாவின் 94வது தேசிய தின கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொலி என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.