எம்பிக்களை அமர்ந்துகொண்டு வரவேற்ற தமிழ்நாடு முதல்வர் என்று வைரலாகும் காணொலி 
Tamil

Fact Check: எம்பிக்களை அமர்ந்துகொண்டு வரவேற்றாரா தமிழ்நாடு முதல்வர்?

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களை நாற்காலியில் அமர்ந்துகொண்டு வரவேற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று ANI ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

Ahamed Ali

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் சேர்த்து மொத்தமாக 40 இடங்களிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த ஜூன் 6ஆம் தேதி வெற்றிபெற்ற திமுக கூட்டணி எம்பிக்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வாழ்த்து பெற்றனர்.


இந்நிலையில், “2024 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களை தமிழக முதல்வர் சென்னையில் சந்தித்து பேசினார்” என்ற கேப்ஷனுடன் ANI ஜூன் 6ஆம் தேதி எக்ஸ் தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், முதல்வர் மு.க. ஸ்டாலின் நாற்காலியில் அமர்ந்தவாறு எம்பிக்களை வாழ்த்தியதாக காணொலியை வெளியிட்டுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து வலதுசாரியினர் பலரும் “திமுகவில் உள்ள எம்பிக்களுக்கு சுயமரியாதை இல்லை” என்று கூறி இக்காணொலியை தவறாக பரப்பி வருகின்றனர்.

வைரலாகும் காணொலி

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் எம்பிக்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுந்து நின்று தான் வரவேற்றார் என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய முதலில் வைரலாகும் காணொலியை ஆய்வு செய்தோம். அப்போது, முதலில் தொண்டர்களை அமர்ந்தவாறு சந்தித்து விட்டு 2:44 பகுதியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியனை எழுந்து நின்று வரவேற்பதை நம்மால் காண முடிந்தது.

தொடர்ந்து, இந்நிகழ்வு தொடர்பாக கலைஞர் செய்தி இரண்டு பகுதியாக வெளியிட்டிருந்த முழு நீள காணொலியை ஆய்வு செய்தோம். அதன் முதல் பகுதியில், 2:20ல் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ் கனி, 7:50ல் கோயமுத்தூர் தொகுதி திமுக எம்பி கனபதி ராஜ்குமார் உள்ளிட்டோரை மு.க. ஸ்டாலின் எழுந்து நின்று வரவேற்கிறார். அதே போன்று இரண்டாவது பகுதி காணொலியின் 8:50ல் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமனி, 10:00ல் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், 15:55 தென் சென்னை தொகுதி திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், 27:39ல் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் உள்பட பல எம்பிக்களையும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என பலரையும் எழுந்து நின்றே முதல்வர் வரவேற்கிறார்‌.

இதுகுறித்து திமுகவின் தலைமை கழக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டதற்கு, “அன்றைய தினம் ஏறத்தாழ 4 மணி நேரம் அந்த நிகழ்வு நடைபெற்றது. எம்பிக்கள் மட்டுமின்றி மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், 234 தொகுதியைச் சேர்ந்த தொகுதி பொறுப்பாளர்கள். ஒவ்வொரு தொகுதியினுடைய ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் வருகை தந்திருந்தனர்.

முதல்வர், காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை அனைவரையும் நின்றவாரே பார்த்துக் கொண்டு இருந்தார். ஒரு மணி நேரத்தில் நிகழ்வு முடிந்து விடும் என்று நினைத்தோம் ஆனால், ஆட்கள் அதிகமாக வந்ததால் நேரம் கடந்து சென்றது, நாங்கள் தான் முதல்வரை அமரும்படி கூறினோம்.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணி வரை, தொண்டர்களை மட்டுமே அமர்ந்துகொண்டு சந்தித்தார். எம்பிக்கள் அனைவரையும் எழுந்து நின்று வரவேற்று அவர்களது சான்றிதழை பார்த்துவிட்டு தான் வாழ்த்தி அனுப்பினார். கிட்டத்தட்ட 2000 பேர் பங்கேற்ற இந்த நிகழ்வு காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது” என்றார். மேலும், அனைத்து எம்பிக்களையும் எழுந்து நின்று தான் வரவேற்றார் என்றும் உறுதிப்படத் தெரிவித்தார்.

Conclusion:

நம் தேடலின் முடிவாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களை நாற்காலியில் அமர்ந்துகொண்டு வரவேற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று ANI தவறாக செய்து வெளியிட்டுள்ளது என்பதை நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Massive protest with saffron flags to save Aravalli? Viral clip is AI-generated

Fact Check: തിരുവനന്തപുരത്ത് 50 കോടിയുടെ ഫയല്‍ ഒപ്പുവെച്ച് വി.വി. രാജേഷ്? പ്രചാരണത്തിന്റെ സത്യമറിയാം

Fact Check: ஆர்எஸ்எஸ் தொண்டர் அமெரிக்க தேவாலயத்தை சேதப்படுத்தினரா? உண்மை அறிக

Fact Check: ಚಿಕ್ಕಮಗಳೂರಿನ ಆಸ್ಪತ್ರೆಯಲ್ಲಿ ಮಹಿಳೆಗೆ ದೆವ್ವ ಹಿಡಿದಿದ್ದು ನಿಜವೇ?, ವೈರಲ್ ವೀಡಿಯೊದ ಸತ್ಯಾಂಶ ಇಲ್ಲಿದೆ

Fact Check: బాబ్రీ మసీదు స్థలంలో రాహుల్ గాంధీ, ఓవైసీ కలిసి కనిపించారా? కాదు, వైరల్ చిత్రాలు ఏఐ సృష్టించినవే