“ஜனவரி 25 குடியரசு நாள் டிசம்பர் 25 ஆஷா..ஜனவரி 15 சுதந்திர நாள்” என்று எழுதப்பட்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஜனவரி 26ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் முதல்வர் உரையின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசு தினத்தின் தேதியை ஜனவரி 15 என்று தவறுதலாக குறிப்பிட்டார் என்பதாக பகிரப்பட்டு வருகிறது. இவ்வாறாக நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும் கடந்த ஜனவரி 26ஆம் தேதி முதல் இக்காணொலி வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி பழையது என்றும் அவர் இவ்வாறாக பேசி முடித்தவுடன் அதனை திருத்திக்கொண்டார் என்பதும் தெரியவந்தது. முதலில், இக்காணொலியின் உண்மைத்தன்மையைக் கண்டறிய யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2017ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி, “சுதந்திரம் மற்றும் குடியரசு தின தேதியை தவறாக குறிப்பிட்ட ஸ்டாலின்” என்ற தலைப்பில் வைரலாகும் அதே காணொலியை தந்தி டிவி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தது.
அதன்படி, “மு.க. ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது குடியரசு மற்றும் சுதந்திரம் ஆகிய இரு தினங்களையும் ஜனவரி 25, டிசம்பர் 25 என்று தவறுதலாக குறிப்பிட்டார். உடனடியாக தவறை உணர்ந்து மேடையிலேயே அதனை திருத்திக் கொண்டார்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதனை Samayam Tamil மற்றும் விகடன் உள்ளிட்ட ஊடகங்கள் 2017ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி செய்தியாகவும் வெளியிட்டுள்ளன. தனது தவறை உணர்ந்த மு.க. ஸ்டாலின், மீண்டும் தெளிவாகப் பேசி முடித்தார் என்றே விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
முடிவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் குடியரசு தினத்தன்று நிகழ்த்திய உரையின் போது குடியரசு தினத்தின் தேதியை தவறாக கூறியதாக வைரலாகும் காணொலி பழையது என்றும் தவறாக கூறியதை மட்டும் எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.