கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். பெரும் அதிர்வல்களை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் தொடர்பாக பல்வேறு காணொலிகளும் செய்திகளும் சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், “விஜய் கட்சியை விட்டு விலகும் பெண்கள்” என்ற கேப்ஷனுடன் பெண் ஒருவர் காரின் முன்பு மாட்டப்பட்டிருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை கழற்றி எறிவது போன்ற காணொலி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி ஜெயபால் என்ற தவெக கட்சி நிர்வாகி தான் இவ்வாறு நடந்து கொண்டார் என்று காணொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Fact Check:
சவுத் செக் ஆய்வில் இத்தகவல் பழையது என்றும் இதற்கும் கரூர் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் தெரியவந்தது.
பைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதிலிருக்கக்கூடிய தகவலை கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, தந்தி ஊடகம் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், வைரலாகும் காணொலியில் உள்ள அதே பெண் உள்ளார். செய்தியில், அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றியம் கார்குடி காலனி தெருவில் வசித்து வரும் பிரியதர்ஷினி ஜெயபால் தவெகவில் ஒன்றிய மகளிரணி நிர்வாகியாக இருந்த நிலையில், கட்சி நிகழ்ச்சியில் இவர் உள்ளிட்ட மகளிர் நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது மாவட்ட நிர்வாகிகள் கண்டுகொள்ள என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த பிரியதர்ஷினி ஜெயபால் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மகளிரணி நிர்வாகிகள், அப்பகுதியில் ஏற்றப்பட்டிருந்த தவெக கட்சி கொடியினை இறக்கி கட்சியில் இருந்து கூண்டோடு விலகினர். அப்போது, அங்கு வந்த தவெக நிர்வாகி ஒருவர் மாவட்ட செயலாளர் ஏற்றிய கொடியை எப்படி இறக்கலாம் என்று கேட்டதால் வாக்குவாதம் எழுந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Times of India ஊடகம் செய்தியாகவும் மற்றும் News Tamil 24x7 காணொலியாகவும் வெளியிட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே தவெக மாவட்ட நிர்வாகிகள், அந்த பெண்ணை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்துள்ளனர். பிரியதர்ஷினி கோபால் உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து, அவர் தவெகவில் தொடர்ந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளார் என்று One India Tamil ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து தவெகவின் பெண் நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவதாக வைரலாகும் காணொலி பழையது என்றும் அதற்கும் கரூர் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்தது.