“பகூத் அறிவு என்பது இதுதான் .. யாருக்குடா சீட் போட்டு வச்சிருக்கானுக” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு நடுவே தலைவர் மு.க. ஸ்டாலின் அமர்ந்துள்ளார். ஸ்டாலினுக்கு பக்கத்தில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்துடன் இருக்கை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவருக்கு இருக்கை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி வலது சாரியினர் கேலி செய்து இக்காணொலியை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்பது தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொளியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, dmk__blood என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் #dmk75 என்ற ஹாஷ்டாகுடன் வைரலாகும் காணொளி பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இது திமுகவின் பவள விழாவின்போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
தொடர்ந்து, திமுக பவள விழா குறித்த செய்திகளை யூடியூபில் ஆய்வு செய்தோம். அப்போது, “திமுக பவள விழாவில் கலைஞர் கருணாநிதியின் அழகிய பேச்சு” என்று கடந்த செப்டம்பர் 17ம் தேதி சன் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், AI தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி முதல்வர் ஸ்டாலின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பேசுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் கலைஞர் கருணாநிதியின் AI தோற்றத்தை கொண்டு வந்து பேச வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் பக்கத்தில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.
Conclusion:
நம் தேடலில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு இருக்கை அமைக்கப்பட்டுள்ளதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் அது கருணாநிதியை AI தொழில்நுட்பத்தால் கொண்டு வந்து பேச வைப்பதற்காக அமைக்கப்பட்ட இருக்கை என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.