
“ஆசிர்வாத் ஆட்டா கலால்(ஹலால்) முத்திரை போட்டு இருக்கு… இன்று முதல் எச்சில் துப்பிய இந்த மைதா மாவை வாங்குவதை நிறுத்திவிடுகிறேன்… ஆசிர்வாத் ஆட்டாவை ஹிந்துக்கள் புறக்கணிப்போம்… ஜெய்ஸ்ரீராம்” என்ற தகவலுடன் ஆசிர்வாத் மாவின் கவரில் ஹலால் முத்திரை இருப்பதாக வலதுசாரியினர் பலரும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
Fact-check:
பரவி வரும் இத்தகவல் உண்மைதானா என்பதைக் கண்டறிய ஆசிர்வாத் ஆட்டாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலினுள் “halal” என்ற கீவர்ட் பயன்படுத்தி தேடினோம். அப்போது, ஆசீர்வாத் ஆட்டாவின் எக்ஸ் பக்கத்தை டேக் செய்து TweetKaregaAmit என்ற பயனர் வைரலாகும் தகவலை எக்ஸ் தளத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்திருந்த ஆசிர்வாத் ஆட்டா, “ஹலால் முத்திரையுடன் இந்தியாவில் ஆசிர்வாத் அட்டா விற்கப்படுவதாக முற்றிலும் தவறான செய்தி பரப்பப்படுகிறது. இதில் காட்டப்பட்டுள்ள பேக்கிங் மிகவும் பழையது மற்றும் ஏற்றுமதிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். மேலும், இது இந்தியாவிற்குள் விற்பனை செய்யப்படுவது இல்லை.
ஆசீர்வாத அட்டா ஹலால் முத்திரையுடன் விற்கப்படுவதாகக் பகிரப்படும் இதுபோன்ற தவறான செய்திகள் யாருக்கும் உதவாது. எனவே, இதுபோன்ற செய்திகளை வெளியிடவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று விளக்கியுள்ளனர். தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கான அமேசான் தளத்தில் ஆசிர்வாத் மாவு குறித்து தேடியபோது, அவற்றில் ஹலால் முத்திரை இருப்பது தெரியவந்தது. அதே, இந்தியாவிற்கான அமேசான் தளத்தில் விற்கப்படும் ஆசிர்வாத் மாவில் ஹலால் முத்திரை இல்லை என்பதும் தெளிவாகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, இந்தியாவில் விற்கப்படும் ஆசிர்வாத் மாவில் ஹலால் முத்திரை இல்லை என்றும் உண்மையில் ஏற்றுமதி செய்யப்படும் ஆசிர்வாத் மாவில் மட்டுமே ஹலால் முத்திரை பயன்படுத்தப்படுகிறது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.