

இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை அளிக்கவில்லை என்று கூறி புகைப்படம் சமூக ஊடகங்களில் (Archive) வைரலாகப் பரவி வருகிறது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்தே சமூக வலைதளங்களில் இப்புகைப்படம் வைரலாவது தெரியவந்தது.
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “The News Minute” ஊடகப் பக்கத்தில் கடந்த 2019 பிப்ரவரி 23 அன்று பரவி வரும் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதில், “தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் இணைந்து மகா கூட்டணி அமைத்ததை அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, இனிமேல் மாநிலத்தில் நடைபெறும் அனைத்து பிரச்சார நிகழ்ச்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணி நிகழ்வுகளாக விளம்பரப்படுத்தப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் அரவிந்த் குனசேகர் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி வைரலாகும் அதே புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் , “பாஜக தலைவர் அமித் ஷா பொதுக் கூட்டத்திற்காக ராமநாதபுரம் வந்தபோது, தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அவரைச் சந்தித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த 2019ல் முன்னாள் அதிமுக பொதுச் செயலார் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை ராமநாதபுரத்தில் சந்தித்த போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பது உறுதியாகிறது.
மேலும் அப்போது சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக பதவியேற்கவில்லை. 2025ம் ஆண்டு செப்டம்பரில் தான் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Conclusion:
முடிவாக, இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை அளிக்கவில்லை எனப் பரவும் புகைப்படம் 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்று தெரியவந்தது.