

ஆர்எஸ்எஸ் தொண்டர் அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை சேதப்படுத்தியதாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
Fact check:
சவுத்செக்கின் ஆய்வில் இது வாட்டிக்கனில் நடைபெற்ற சம்பவம் என்றும் அச்சம்பவத்தில் ஈடுபட்டவர் ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
இந்தத் தகவல் குறித்து நாம் விரிவான ஆய்வை மேற்கொண்டோம். முதலில் இக்காணொலியில் உள்ள காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் மூலம் ஆய்வு செய்தபோது, இச்சம்பவம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான வாட்டிகன் நகரில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் நடந்துள்ளது என்று Sacred Heart of Jesus என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், Ansa என்ற இததாலிய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இது 2025 பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெற்ற நிகழ்வு என்பதையும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தச் சம்பவம் குறித்து வாட்டிகன் செய்தித் தொடர்பாளர் அளித்த விளக்கத்தின்படி, சிலையுடைப்பில் ஈடுபட்ட நபர் கடுமையான மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது தெரியவந்தது.
மேலும், கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி NDTV வெளியிட்டுள்ள செய்தியின் படி, வாட்டிகன் காவல்துறையினர் அவரை முதலில் தடுத்து வைத்து விசாரணை நடத்தி, பின்னர் மேலதிக நடவடிக்கைக்காக இத்தாலி நாட்டுப் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையின் முடிவில் அந்த நபர் ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்தது.
சர்வதேச ஊடகங்களோ அல்லது வாட்டிகன் புலனாய்வு அமைப்புகளோ இந்த நபர் இந்தியர் என்றோ அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை. வாட்டிகனில் நடந்த இந்தச் சம்பவத்திற்கும் இந்தியாவிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, வாட்டிகன் நகரில் ருமேனிய நாட்டைச் சேர்ந்தவரால் நடத்தப்பட்ட இச்செயலை, அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ் தொண்டர் செய்ததாகத் தவறாகச் சித்தரித்துபகிர்ந்து வருகின்றனர்.