

"சவுதி அரேபியாவில் உள்ள சிஸ்ரான் (Syzran) மற்றும் சரடோவ் (Saratov) ஆகிய இரண்டு பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ட்ரோன் தாக்குதலில் தகர்க்கப்பட்டு நாசமாகின" என்ற தகவல் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வரும் சூழலில், சவுதி அரேபியாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி இத்தகவல் பரப்பப்படுகிறது
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அந்த இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களும் ரஷ்யாவில் இயங்கி வருகின்றன என்றும் தெரியவந்தது.
தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் சிஸ்ரான் மற்றும் சரடோவ் ஆகிய இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் சவுதி அரேபியாவில் அமைந்திருக்கவில்லை; மாறாக அவை ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள முக்கிய ஆலைகள் ஆகும்.
சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் (Reuters) வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி, சிஸ்ரான் சுத்திகரிப்பு நிலையம் ரஷ்யாவின் சமாரா பிராந்தியத்திலும், சரடோவ் சுத்திகரிப்பு நிலையம் ரஷ்யாவின் சரடோவ் மாகாணத்திலும் அமைந்துள்ளன. உக்ரைனின் ஆளில்லா ட்ரோன் தாக்குதல்களுக்குப் பிறகு ரஷ்யாவின் இந்த இரு ஆலைகளும் தங்கள் எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் விரிவாகப் பதிவு செய்துள்ளது.
அதேபோல், ரஷ்ய-உக்ரைன் போர் தொடர்பான Pravada செய்தி நிறுவனத்தின் கள ஆய்வறிக்கைகளில், வோல்கா நதிக்கரையில் அமைந்துள்ள சமாரா பிராந்தியத்தின் சிஸ்ரான் நகரில் உள்ள ரோஸ்நெஃப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆலை மற்றும் சரடோவ் ஆலை மீது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆலைகள் ரஷ்ய எல்லைக்குட்பட்ட பிராந்தியங்கள் என்பது அச்செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அல் ஜசீரா (Al Jazeera) வெளியிட்ட கட்டுரையில், சிஸ்ரான் மற்றும் சரடோவ் ஆகிய இரு ஆலைகளும் ரஷ்யாவின் உள்நாட்டு எரிசக்தி உட்கட்டமைப்பின் பிரதான அங்கங்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளது. சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்திற்கும் அல்லது சவுதி நாட்டு எல்லைக்கும் இந்த ஆலைகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது இதன் மூலம் வெளிப்படையாகத் தெரியவருகிறது.
Conclusion:
ரஷ்யாவில் உள்ள சிஸ்ரான் மற்றும் சரடோவ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் சம்பவத்தை, சவுதி அரேபியாவில் நடந்ததாகத் தவறான புவியியல் தகவலுடன் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.