
மர்ம நபர் ஒருவர் கார் கண்ணாடியை உடைத்து அதில் இருக்கும் பையை திருடிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. இந்நிகழ்வு நேற்று (தேதி குறிப்பிடப்படவில்லை) கோயம்புத்தூரில் உள்ள சாய்பாபா கோவிலின் இரண்டாவது நுழைவு வாயிலில் நடைபெற்றதாக கூறி பரப்பி வருகின்றனர். மேலும், அந்த நபர் ஒருவித கெமிக்கல் பொடியைப் பயன்படுத்தி காரின் கண்ணாடியை உடைப்பதாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இந்நிகழ்வு தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்றும் மராட்டிய மாநிலம் ஷீரடியில் நடைபெற்றது என்றும் தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்த்தபோது, இந்நிகழ்வு மராட்டிய மாநிலம் ஷீரடியில் நடைபெற்றது என்று Mind iT என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது.
மேலும், “ஷீரடி சாய்மந்திர் விஐபி கேட் முன்புறம் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவம் சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இக்காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்” என்று வைரலாகும் காணொலியுடன் SP 24 TAAS என்ற யூடியூப் சேனலில் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2023ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி Times of India செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “ஷீரடியில் உள்ள கோயில் வளாகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து திருடப்பட்டது தொடர்பான காணொலி வைரலானதை அடுத்து, ஷீரடி காவல்துறையினர் தாமாக முன்வந்து இதனை விசாரித்து வருகின்றனர்.
துணை காவல் கண்காணிப்பாளர் சந்தீப் மிட்கே உட்பட அகமதுநகரின் மூத்த காவல்துறை அதிகாரிகள் திருட்டு வழக்கு குறித்து கூடுதல் தகவல்களைப் பெற ஷீரடிக்குச் சென்றனர். “இந்த சம்பவம் எட்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை காவல்துறையை அணுகவில்லை என்றாலும், நாங்கள் வழக்கை விசாரித்து வருகிறோம்” என்று சந்தீப் மிட்கே கூறினார்.
ஒருவர் காரைக் கடந்து சாதாரணமாக நடந்து செல்வதையும், பின்னர் ஒரு உண்டிகோலைப் பயன்படுத்தி, பின்புற கதவின் கண்ணாடியை உடைப்பதையும் அக்காணொலி காட்டுகிறது. மேலும், சிறிது தூரம் சென்ற பிறகு, அந்த நபர் காருக்குத் திரும்புகிறார். அவர் தனது தலையை கார் ஜன்னலுக்குள் நுழைத்து, பின் இருக்கையில் இருந்த ஒரு பையை வெளியே எடுக்கிறார். ஷீர்டி கோயிலின் இரண்டாம் நுழைவு வாயிலின் அருகே சாலையில் கார் நிறுத்தப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கோயம்புத்தூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து பையைத் திருடிய நபர் என்று வைரலாகும் நிகழ்வு உண்மையில் மராட்டிய மாநிலம் ஷீரடியில் நடைபெற்ற சம்பவம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.