

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதை அடுத்து, அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைபேசி (செல்போன்) பேச தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களிலும், சில ஊடகங்களிலும் செய்திகள் பரவி வருகின்றன.
Fact Check:
பரப்பப்படும் செய்திகளின் பின்னணி குறித்து சவுத்செக் ஆய்வு செய்தபோது, அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்ற விதி பல ஆண்டுகளுக்கு முன்பே அமலில் இருந்தது கண்டறியப்பட்டது.
முதலாவதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை ஒரு முக்கிய சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில், செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைபேசியைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. மேலும், ஓட்டுநர்கள் தங்களுடைய சட்டைப் பையில் கூட செல்போன் வைத்திருக்கக் கூடாது என்றும், அதனை நடத்துநரிடம் (Conductor) ஒப்படைத்துவிட்டு பணி முடிந்த பிறகு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்துத் துறை தெளிவாக அறிவுறுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மற்றொரு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தது. அதன்படி, ஓட்டுநர்கள் விதிமுறையை மீறி பணியின் போது செல்போனில் பேசினால், அவர்கள் உடனடியாக 29 நாட்கள் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில், தற்போது தவெக அரசு புதிதாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்று உறுதியாகிறது. கடந்த காலங்களில் முந்தைய அரசால் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள விதிகளையே, புதிய அறிவிப்பு போல ஊடகங்கள் தவறாக சித்தரித்துள்ளன.
ஆசியானெட் நியூஸ் தமிழ் (Asianet News Tamil) ஊடகத்தில் 2022 பிப்ரவரி 07 அன்று வெளியான செய்தியில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதும், அதை மீறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்ததும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை (Hindu Tamil Thisai) நாளிதழில் 2024 டிசம்பர் 24 அன்று வெளியான செய்தியில், பணியின் போது செல்போன் பேசும் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு 29 நாட்கள் சஸ்பெண்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட செய்தி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பதும், மீறினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படும் என்பதும் முறையே 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டிலேயே தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட பழைய நடைமுறைகளாகும். இந்த பழைய உத்தரவுகளை தற்போதைய தவெக அரசு புதிதாக பிறப்பித்தது போல் தந்தி டிவி உள்ளிட்ட ஊடகங்கள் பரப்புவது முற்றிலும் தவறான செய்தி என்று ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.