வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில், “பங்களாதேஷின் ஒரேயொரு இந்து கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டிற்கு தீ வைப்பு” என்ற கேப்ஷனுடன் வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்படும் புகைப்படம் வலதுசாரியினரால் சமூக வலைதளங்களில் (Archive) பரப்பப்படுகிறது. வங்கதேச கிரிக்கெட் அணியில் உள்ள இந்து வீரரான லிட்டன் தாஸின் வீட்டினை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்துகின்றனர் என்று கூறி இப்புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இப்புகைப்படம் வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் பின் மோர்தசாவின் வீடு என்று தெரியவந்தது. இப்புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, First Post வைரலாகும் புகைப்படத்துடன் நேற்று (ஆக. 06) செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது.
அதில், “வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் மோர்தசாவின் வீட்டிற்கு திங்கள்கிழமை (ஆக.05) போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
குல்னா பிரிவில் உள்ள நரைல்-2 தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான மோர்தசா, 2024 பொதுத் தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக வெற்றி பெற்றார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக வங்கதேச ஊடகங்களான United News of Bangladesh மற்றும் NandighoshaTV உள்பட பல்வேறு ஊடகங்கள் வங்காள மொழியில் செய்தி வெளியிட்டுள்ளன.
Conclusion:
நம் தேடலின் முடிவாக வங்கதேச கிரிக்கெட் அணியில் உள்ள ஒரே ஒரு இந்து வீரரான லிட்டன் தாஸின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் உண்மையை இல்லை என்றும் உண்மையில் தீவைக்கப்பட்டது வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மஷ்ரஃப் பின் மோர்தசாவின் வீடு என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.