Fact Check: சாலையோரம் நின்று இருந்த இருசக்கர வாகனத்தை தாக்கும் காவலர்? இச்சம்பவம் திமுக ஆட்சியில் நடைபெற்றதா

திமுக ஆட்சியில் சாலையோரம் நின்ற இரு சக்கர வாகனத்தை காவலர் ஒருவர் சரமாரியாக தடியால் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது
இருசக்கர வாகனத்தை தடியால் தாக்கிய காவல்துறையினர்
இருசக்கர வாகனத்தை தடியால் தாக்கிய காவல்துறையினர்
Published on
2 min read

“சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் குறித்து போலீஸ் ரோந்து ஜீப்பில் வந்த எஸ்.ஐ அந்த வாகனத்தை ஓட்டி வந்த மாணவரிடம் விசாரிக்கும்போதே, பேட்ரால் வாகன ஓட்டுநர் மோகன் என்பவர் ரூல் தடியால் வாகனத்தை அடித்து உடைக்கிறார். பயந்துப்போன மாணவர் வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் செல்கிறார். தானே நீதிபதிகளாக மாறி வாகனத்தை உடைத்து தண்டனை கொடுக்கும் போலீஸாரின் செயலை ஒருவர் செல்போனில் பதிவு செய்து, அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்ய அது வைரலாகி வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்” என்ற தகவலுடன் காவலர் இருசக்கர வாகனத்தை தடியால் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகிறது. மேலும், திமுக ஆட்சியில் நடைபெற்றதாக இதனை பரப்பி விடுகின்றனர்.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் இச்சம்பவம் 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்றது என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலி குறித்த உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி இந்து தமிழ் வைரலாகும் அதே பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. இதனைக் கொண்டு தொடர்ந்து தேடுகையில் The News Minute ஊடகம் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.

அதன்படி, கல்லூரி மாணவருக்குச் சொந்தமான இரு சக்கர வாகனம் சென்னை மெரினா கடற்கரை அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது, விஐபி கான்வாய்க்காக அவ்வழியை சரி செய்து கொண்டிருந்த காவலர் அந்த இருசக்கர வாகனத்தை தடியால் தாக்கினார். புதன்கிழமை (மார்ச் 27) நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவத்தை, அவ்வழியாகச் சென்ற ஒருவர் படம் பிடித்துள்ளார்.

இருசக்கர வாகனத்தை தாக்கியவர் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. "பணியாளர்கள் விரக்தியடைந்ததாகத் தெரிகிறது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம், திங்கட்கிழமை இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்று பூக்கடை சரக துணை காவல் ஆணையர் அரவிந்தன் கூறியதாக The New India Express வெளியிட்டுள்ள செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

The News Minute வெளியிட்டுள்ள செய்தி
The News Minute வெளியிட்டுள்ள செய்தி

Conclusion:

முடிவாக, நம் தேடலில் இருசக்கர வாகனத்தை காவலர் ஒருவர் தடியால் சரமாரியாக தாக்கும் சம்பவம் 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்றது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in