Fact Check: கூடுதல் சம்பளம் கேட்ட வேலைக்காரரை தாக்கினாரா பாஜக எம்எல்ஏ விபுல் துபே?
“விபுல் துபே பாஜக எம்எல்ஏ ஜான்பூர் சட்டசபை உத்தரபிரதேசம் ஒரு ஏழை வீட்டு வேலைக்காரன் கூடுதல் சம்பளம் கேட்டதற்காக இப்படி அடிக்கப்பட்டான். இந்த சங்கி எம்.எல்.ஏ தண்டனை பெற வேண்டும். மற்ற குரூப்பில் சேர் செய்யவும். சுப்ரீம்கோர்ட் தண்டனை வழங்க வேண்டும். யாத்ரீகன். இந்திய குடிமக்கள் கழகம்.” என்ற தகவலுடன் நபர் ஒருவரை மற்றொருவர் கம்பால் தாக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Dainik Bhaskar 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “இச்சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்த், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தெரியவில்லை என்றும், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் ஷாஜஹான்பூரிலிருந்து நடைபெற்றது என்று பத்திரிக்கையாளர் ரன்விஜய் சிங் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவிற்கு ஏப்ரல் 16ஆம் தேதி ஷாஜஹான்பூர் காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமாரின் விளக்க காணொலியை ஷாஜஹான்பூர் காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் பதிவிட்டுள்ளது.
அதில் விளக்கம் அளித்துள்ள காவல்துறை அதிகாரி, “குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் பிரதீக் திவாரி. பாதிக்கப்பட்டவரின் பெயர் ராஜீவ் பரத்வாஜ். பிரதீக் திவாரியிடம் பணிபுரியும் ஒரு சிறுவனின் தகவலை ராஜீவ் பரத்வாஜ் வெளிப்படுத்தத் தவறிவிட்டதாகவும், அதன் காரணமாக ராஜீவ் பரத்வாஜை பிரதீக் திவாரி துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர் காவல்துறையினரிடம் தெரிவித்தார். இத்கவலின் அடிப்படையில் பிரதீக் திவாரி, சமித்தார் மற்றும் அடையாளம் தெரியாத நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது தேவையான நடவடிக்கை உறுதி செய்யப்பட்டது, மீதமுள்ளவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக வீட்டு வேலைக்காரர் கூடுதல் சம்பளம் கேட்டதற்காக பாஜக எம்எல்ஏ விபுல் துபே அந்நபரை தாக்கியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி தவறானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.