“வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் ஆடு, மாடுகள். தூத்துக்குடி மாவட்டம் ஏரல், முக்காணி, புன்னக்காயல் பகுதிகளில் மழை வெள்ளத்தின் காரணமாக தாமரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆடுகள், மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கோர காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது” என்று கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Leandro David என்ற எக்ஸ் பயனர் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி இக்காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைக் கொண்டு முதற்கட்டமாக இது பழைய காணொலி என்று உறுதியாகிறது.
தொடர்ந்து, இக்காணொலி எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து தேடினோம். அப்போது, 2020ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி Imagen Noticias என்ற மெக்சிகோ ஊடகத்தின் யூடியூப் சேனலில் வைரலாகும் இதே காணொலி வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, “ஹனா புயலின் காரணமாக மெக்சிகோவின் நயாரிட் மாகாணத்தில் உள்ள சகுவால்பன் நகரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கால்நடைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக unotv என்ற மெக்சிகோ ஊடகம் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, தூத்துக்குடி மாவட்ட சுற்றுவட்டாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் கால்நடைகள் அடித்துச் செல்லப்படும் காட்சி என்று வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்றும் அது உண்மையில் மெக்சிகோவில் ஏற்பட்ட ஹனா புயலின் போது எடுக்கப்பட்ட காணொலி என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.