
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தியில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், மதுரை மாநாடு குறித்து நிருபர்களிடம் பேச மறுத்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் இக்காணொலி விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலி தொடர்பான உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2024ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை எக்ஸ் பயனர் பதிவிட்டிருந்தார். இதன் மூலம் முதற்கட்டமாக இது தவெக-வின் முதல் மாநாட்டின் போது தொடர்புடையது என்று தெரிய வந்தது. மேலும், அதே ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி சமயம் தமிழ் இது தொடர்பாக விரிவான செய்தியையும் வெளியிட்டிருந்தது.
தொடர்ந்து, மதுரை மாநாடு குறித்து சந்திரசேகர் கருத்து எதுவும் தெரிவித்தாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது. மாநாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அவர்(விஜய்) ரொம்ப சந்தோஷமா இருந்தார். மாநாடு நன்றாக இருந்தது. ரெஸ்பான்ஸ் நல்லா இருந்தது. நல்ல கூட்டம். எப்பவுமே என்னோட ஆசீர்வாதம் இருக்கும்” என்று சந்திரசேகர் பதில் அளித்ததாக மாலை மலர் ஊடகம் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.
Conclusion:
முடிவாக, 2024ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டோடு தொடர்புடைய காணொலியை தற்போது மதுரையில் நடைபெற்ற மாநாட்டோடு தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர் என்று தெரியவந்தது.