

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பைச் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பயின்றார் என்று கூறி ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. லயோலா என்பது ஒரு கல்லூரி என்ற அடிப்படை உண்மைகூட இல்லாமல், அவர் அங்குப் பள்ளிப் படிப்பை முடித்ததாகவும், அதற்கான அசல் ஆவணம் மற்றும் புகைப்படம் இதுதான் என்றும் குறிப்பிட்டுப் பலரும் இதனை உண்மை என நம்பிப் பகிர்ந்து வருகின்றனர்.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் இந்தப் புகைப்படம் மற்றும் தகவல் குறித்து நாம் ஆய்வு செய்தபோது, அது முற்றிலும் போலியானது என்பது தெரியவந்துள்ளது. முதலாவதாக, லயோலா என்பது ஒரு உயர்கல்வி நிறுவனமாகும் (கல்லூரி); விஜய் தனது ஆரம்பக் கல்வியைச் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா பள்ளியிலும், மேல்நிலைப் பள்ளிக் கல்வியை விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் பள்ளியிலுமே பயின்றார் என்பது டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியான அவரது கல்விப் பின்னணித் தகவல்கள் மூலம் உறுதியாகிறது.
மேலும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் அந்தப் புகைப்படத்தை நுணுக்கமாக ஆய்வு செய்ததில், அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலிப் படம் என்பது தெளிவாகியுள்ளது. புகைப்படத்தை DeepAI மற்றும் SynthID இணையதள உதவியுடன் ஆய்வு செய்த பொது இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
Conclusion:
முதலமைச்சர் விஜய் லயோலா கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்தார் என்பதும், அதனுடன் இணைத்துப் பகிரப்படும் புகைப்படம் அசலானது என்பதும் முற்றிலும் தவறான தகவலாகும். அவர் சென்னையில் உள்ள பாத்திமா மற்றும் பாலலோக் பள்ளிகளிலேயே பள்ளிப் படிப்பை முடித்தார் என்பதும், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் படம் என்பதும் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.