

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பெரும் பொருள் சேதமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்தச் சூழலில், நேபாளத்தின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காகத் தமிழக அரசின் சார்பில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ரூ.25 கோடி நிதி வழங்கியதாகத் தகவல்கள் பரவின. மேலும், முதல்வர் விஜய் நேபாளப் பிரதமரை நேரில் சந்தித்து இந்த நிவாரண நிதியை வழங்கியதாகச் சமூக வலைத்தளங்களிலும், ரீல்ஸ் வீடியோக்களிலும் ஒரு செய்தி வேகமாகப் பகிரப்பட்டுப் பொதுமக்களிடையே பெரும் பேசுபொருளானது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் முற்றிலும் தவறானது என்று தெரியவந்தது.
நேபாள வெள்ள நிவாரணத்திற்காகத் தமிழக அரசோ அல்லது முதல்வர் விஜய்யோ ரூ.25 கோடி நிதி வழங்கியதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அரசாணையோ அல்லது முறையான அறிவிப்போ வெளியாகவில்லை. உண்மையில், வெள்ளத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த யாத்ரீகர்களைப் பத்திரமாக மீட்பதற்கான பணிகளை மட்டுமே அரசு மேற்கொண்டது. தி கம்யூன் (The Commune) ஊடகம் 2026 செப்டம்பர் 2 அன்று வெளியிட்ட கட்டுரையில், நேபாள பேரிடருக்குத் தமிழக அரசு ரூ.25 கோடி நிதி வழங்கியதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது என்றும், சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான பிரச்சாரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (The Indian Express) நாளிதழில் 2026 ஆகஸ்ட் 30 அன்று வெளியான செய்தியில், நேபாளத்தில் சிக்கித் தவித்த தமிழக யாத்ரீகர்களை மீட்பதற்காக அமைச்சர்கள் தில்லிக்கு அனுப்பப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, நேபாளத்திற்கு ரூ.25 கோடி நிவாரண நிதி எதுவும் வழங்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
24 நியூஸ் (24 News) ஊடகம் 2026 ஆகஸ்ட் 27 அன்று வெளியிட்ட செய்திப் பதிவில், நேபாளத்தில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்பதற்குத் தமிழ்நாடு இல்லத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் குழுவை முதல்வர் களமிறக்கியது மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளது; எந்தவொரு நிதிப் பகிர்வும் இடம்பெறவில்லை என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.
Conclusion:
நேபாள வெள்ள நிவாரணத்திற்காக முதல்வர் விஜய் ரூ.25 கோடி நிதி வழங்கினார் என்று பரப்பப்படும் செய்தி முற்றிலும் வதந்தியாகும். பேரிடரில் சிக்கிய தமிழகப் பயணிகளை மீட்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டனவே தவிர, எவ்வித நிதி உதவியும் வழங்கப்படவில்லை.