
ஜெர்மனி மற்றும் லண்டன் பயணத்தை முடித்துவிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று(செப் 8) சென்னை திரும்பினார். அப்போது, வெளிநாட்டுப் பயணம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், செய்தியாளர்கள் கேள்வி கேட்கப்படுவதற்கு முன்பே “நீங்கள் கேட்கிற அடுத்த கேள்விக்கு பதில்” என்று கூறி செய்தியாளர் சந்திப்பில் மு.க. ஸ்டாலின் பதில் அளித்ததாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வெளிநாட்டு பயணம் குறித்து எழுந்த விமர்சனங்களை வரிசையாக சொல்லி, அதற்கு ஒவ்வொன்றாக பதில் அளித்த முதல்வரின் காணொலியை தவறாக பரப்பி வருகின்றனர் என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலி குறித்த உண்மை தன்மையை கண்டறிய முதல்வரின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான காணொலியை ஆய்வு செய்தபோது, வைரலாகும் காணொலியின் நேரலை பதிவை தந்தி ஊடகம் நேற்று (செப் 8) வெளியிட்டிருந்தது. அதில், 4:03 பகுதியில் பேசிய ஸ்டாலின், “சிலரால் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எதற்கு இந்த வெளிநாட்டு பயணம்… இங்கு இருக்கக்கூடியவர்களை சந்தித்து பேசினால் போதாதா… என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக பேசியதாக நினைத்துக் கொண்டு புலம்பியுள்ளனர். அவர்களுக்கெல்லாம் நான் கூறிக் கொள்வது என்னவென்றால்…” என்று கூறி தனது வெளிநாட்டு பயணம் குறித்து பேசத் துவங்கினார் ஸ்டாலின்.
தொடர்ந்து, 5:10 பகுதியில் வைரலாகும் அதே காணொலி இடம்பெற்றுள்ளது. அதில் பேசும் அவர், “ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் நபர் இன்னொரு நாட்டின் மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் நபரை சந்திக்கும் போது. வணிகத்தைத் தாண்டி இந்த உறவு வலிமை ஆகிறது. அப்படித்தான் Hendrik Wüst மற்றும் Catherine West ஆகியோருடைய சந்திப்பு இருந்தது.
அதேபோன்று நீங்கள் கேட்கும் அடுத்த கேள்விக்கு பதில் என்னவென்றால் ஏற்கனவே தமிழ்நாட்டில் நிறுவனங்கள் இருந்தாலும் அவர்கள் புதிய திட்டத்தை இங்குதான் துவங்க வேண்டும் விரிவு படுத்த வேண்டும் என்கின்ற அவசியமில்லை. அவர்களுடைய புதிய முதலீடுகளையும் தமிழ்நாட்டில் மேற்கொள்வதாக உறுதி செய்ய வேண்டிய நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து பேசும் போது தான் அவற்றை அவர்கள் உறுதி செய்கின்றனர். இதற்காக இதுபோன்ற பயணங்கள் தேவைப்படுகின்றது” என்று 7:12 வரை பயணம் குறித்து பேசுகிறார் ஸ்டாலின். அதன்பிறகே செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க துவங்குகிறார்.
Conclusion:
வெளிநாட்டு பயணம் குறித்து எழுந்த விமர்சனங்களை வரிசையாக பட்டியலிட்டு, விமர்சனங்களுக்கு ஒவ்வொன்றாக பதில் அளித்து இருப்பார் ஸ்டாலின். அதன் தொடர்ச்சியாகவே “உங்களின் அடுத்த கேள்வி” என்று விமர்சனங்களில் எழுந்த கேள்விகள் குறித்தே பேசி இருக்கிறார். அவரின் பேச்சிற்கு பிறகே பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். இதனையே தவறாக திரித்து பரப்பி வருகின்றனர் என்று நம் தேடலில் தெரியவருகிறது.