திமுக ஆட்சியில் மது அருந்திய மாணவிகள்
திமுக ஆட்சியில் மது அருந்திய மாணவிகள்

Fact Check: வகுப்பறையில் மது அருந்தும் மாணவிகள்? திமுக ஆட்சியில் நடைபெற்றதா

திமுக ஆட்சியில் மாணவிகள் வகுப்பறையில் மது அருந்துவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி
Published on

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு இடையேயான தொடர்பு இடைவெளியைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘APPA’ செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த செயலி தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தால் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், “கேடுகெட்ட அப்பாவின் அன்பு மகள்கள்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், சீருடை அணிந்துள்ள மாணவிகள் மது அருந்தும் காட்சி பதிவாகியுள்ளது. இந்நிகழ்வு திமுக ஆட்சியின் போது தமிழ்நாட்டில் நடைபெற்றதாக கூறி பரப்பி வருகின்றனர்.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் இக்காணொலி 2019 ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பரவி வருவது தெரியவந்தது. 

வைரலாகும் காணொலி சமீபத்தில் திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது தானா என்பதை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, தெலுங்கு ஃபேஸ்புக் பக்கத்தில் 2019ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. ஆனால், இந்நிகழ்வு எங்கு நடந்தது என்பது போன்ற தகவல்கள் ஏதும் அப்பதிவில் இல்லை.

தொடர்ந்து தேடுகையில், Saurabh Roy என்ற பேஸ்புக் பயனரும் வைரலாகும் அதே காணொலியை 2019ஆம் ஆண்டு பதிவிட்டுள்ளார். மேலும், RJ Veg Fruits என்ற பேஸ்புக் பக்கத்திலும் வைரலாகும் காணொலி 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், “திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகில் உள்ள கள்ளிகுளம் TDMNS கல்லூரி மாணவிகள் வகுப்பறையில் பீர் குடித்து கோடை சூட்டை தனித்து பெண்ணியம் காத்த போது எடுத்த வீடியோ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல்லை தனியார் கல்லூரி மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தியதாக Polimer News ஊடகம் 2019ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், 2019ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மாணவிகள் மது அருந்துவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி 2019ஆம் ஆண்டு வைரலானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

logo
South Check
southcheck.in