“கன்னடத்துகாரன் தமிழன், சென்னைகாரண அடிக்கிறான், இங்க கன்னடதான தலைவன், சூப்பர் ஸ்டார்னு சொல்லி *** *** இருக்கானுங்க வெக்கம் கெட்ட DVD பசங்க ....த்து” என்ற கேப்ஷனுடன் சிஎஸ்கே ரசிகரை சிலர் தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் தற்போது நடைபெற்றது போன்று பரப்பி வருகின்றனர்.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இச்சம்பவம் 2018ஆம் ஆண்டு நடைபெற்றது என்பது தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி TOI Plus என்ற Times of Indiaவின் ஃபேஸ்புக் பக்கம், “தோனியின் மிகப்பெரிய ரசிகர்களில் ஒருவரான சரவணன் ஹரி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 10, 2018) சேப்பாக்கத்திற்கு வெளியே தாக்கப்பட்டார்” என்ற கேப்ஷனுடன் வைரலாகும் அதே காணொலியை வெளியிட்டுள்ளது.
கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி புதிய தலைமுறை ஊடகம் இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “பல்வேறு அரசியல் கட்சியினர் ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்த அனுமதிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஐபிஎல் போட்டியை காண வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதில் செய்தியாளர்களை சந்தித்த சரவணன் ஹரி, “நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த என்னுடைய நண்பர்களும், தமிழ் உணர்வாளர்கள் 15 பேரும் என்னை தாக்கினர்” என்று கூறினார். இது குறித்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி விரிவாக செய்தி வெளியிட்டிருந்த crictracker, காவேரி பிரச்சினையின் காரணமாக சிஎஸ்கே ரசிகரான சரவணன் ஹரி தாக்கப்பட்டதாகவும், இப்பிரச்சனை காரணமாக சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டதாகும் தெரிவித்துள்ளது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக சமீபத்தில் சிஎஸ்கே ரசிகர் தாக்கப்பட்டதாக வைரலாகும் காணொலி 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.