வங்கதேசத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவ அமைப்பினர் இணைந்து நடத்திய போராட்டத்தால் அங்கு வன்முறை வெடித்தது. இதனையடுத்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில், “பங்களாதேஷில் கிராமங்களில் சிதறிக் கிடக்கும், யாருக்கும் ஒரு தீங்கும் விளைவிக்காத்த இந்துக்களின் உடல்களைப் பாருங்கள். 1921-ல் நம் நாட்டின் துரோகிகளான முஸ்லிம் தீவிரவாதிகள் கேரளத்தில் நடத்திய மாப்பிள கலவர கொலைகளை காணாதவர்கள் இந்த வீடியோவில் நேரடியாக காணலாம்” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், ஆற்றங்கரை ஓரத்தில் பினக்குவியல்கள் சிதறிக்கிடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இறந்து கிடப்பது இந்துக்கள் என்று கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலியில் இருப்பது பர்மா - வங்கதேச எல்லையில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலால் கொல்லப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களின் உடல்கள் என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வைரலாகும் காணொலியுடன் Al Jazeera ஊடகம் தனது யூடியூப் சேனலில் கடந்த ஆக. 10ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “மியான்மர் ராணுவத்துக்கும் சக்திவாய்ந்த கிளர்ச்சியாளர் குழுவுக்கும் இடையே தீவிரமடைந்த சண்டையில் வங்கதேச எல்லைக்கு அருகே குறைந்தது 200 ரோஹிங்கியா இன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரிவாக செய்தி வெளியிட்டுள்ள CNN ஊடகம், “கடந்த வாரம் மியான்மரின் மேற்கு ரக்கைன் மாநிலத்தில் வன்முறையில் இருந்து தப்பியோடிய பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் ட்ரோன் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர் என்ற செய்திகளுக்குப் பிறகு, நாடற்ற ரோஹிங்கியா முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான இனச் சுத்திகரிப்பு குறித்த புதுப்பிக்கப்பட்ட அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.
சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்ட மற்றும் CNN ஊடகத்தால் Geo Locate செய்யப்பட்ட காணொலிகள், மியான்மரை வங்கதேசத்திலிருந்து பிரிக்கும் நாஃப் ஆற்றின் சேற்றுக் கரையில் டஜன் கணக்கான உடல்கள் சிதறிக் கிடப்பதைக் காட்டியது. ஒரு காணொலியில், ஆற்றின் கரையில் உள்ள மாங்டாவ் டவுன்ஷிப்பின் மியோ மா வார்டின் மேற்கு விளிம்பு என்று Geo Locate செய்யப்பட்டது, ஒருவர் அழுதுகொண்டே இரத்தக் கறை படிந்த சேற்றுப் பாதையில் நடந்து செல்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் மணல், புல் மற்றும் தண்ணீர் குளங்களில் கிடப்பதைக் காண முடிகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே செய்தியை Democracy Now என்ற இணையதளமும் வெளியிட்டுள்ளது. மேலும், “இந்திய - வங்கதேச எல்லையில் நடக்கும் அட்டூழியங்களை பொய்யாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் போலி காணொலிகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை” என்று மேகாலயா காவல்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக வங்கதேச கிராமங்களில் சிதறிக் கிடக்கும் இந்துக்களின் உடல்கள் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் காணொலியில் இருப்பது பர்மா - வங்கதேச எல்லையில் நடைபெற்ற
ட்ரோன் தாக்குதலால் கொல்லப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களின் உடல்கள் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.