Fact Check: புதிய டிஜிபின் பழைய பின் முறைக்கு முடிவுகட்டுமா? உண்மை அறிக

ஒன்றிய அரசு தபால் துறையில் அறிமுகப்படுத்தியுள்ள டிஜிபின் பழைய பின் முறையை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய டிஜிபின் நடைமுறை
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய டிஜிபின் நடைமுறை
Published on
2 min read

“அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றாக இந்திய அஞ்சல் துறை 'DigiPIN' என்ற டிஜிட்டல் முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் நாட்டில் DIGIPIN புதிய முகவரி அமைப்பாக இருக்கும். பாரம்பரிய PIN குறியீடுகள் பரந்த பகுதியை உள்ளடக்கியிருந்தாலும், 10 இலக்க DigiPIN அமைப்பு உங்கள் வீடு அல்லது வணிகத்தின் சரியான இருப்பிடத்தைக் குறிக்கிறது…” என்று ஒன்றிய அரசு தபால் துறையில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள டிஜிபின் முறை குறித்த நீண்ட பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், பின்னின் (PIN) சகாப்தம் முடிந்துவிட்டதாகவும் அதற்கு மாற்றாக இந்திய அஞ்சல் துறை டிஜிபின் (DIGIPIN) என்ற டிஜிட்டல் முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் டிஜிபின் வருகையால் பழைய பின் நடைமுறை முடிவுக்கு வராது என்று தெரியவந்தது.

டிஜிபின் தொடர்பாக வைரலாகும் இத்தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, Indian Express Tamil ஊடகம் இதுதொடர்பாக இன்று (ஜூன் 10) செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "டிஜிபின், குடிமக்களுக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே பாதுகாப்பான மற்றும் திறமையான தகவல் தொடர்புக்கு வழிவகுக்கும். இது Geo-coded மற்றும் Grid-based கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் முகவரி அமைப்பாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Indian Express Tamil வெளியிட்டுள்ள செய்தி
Indian Express Tamil வெளியிட்டுள்ள செய்தி

இந்த புதிய அமைப்பு குறித்து இந்திய அஞ்சல் துறை தனது 'எக்ஸ்' பக்கத்தில், "கட்டமைக்கப்படாத அல்லது மாறிவரும் முகவரிகளைக் கொண்ட பகுதிகளில், துல்லியமான இருப்பிட அடிப்படையிலான அடையாளத்தை வழங்குவதன் மூலம் முகவரி நிர்வாகத்தை டிஜிபின் எளிதாக்குகிறது. குறிப்பாக, கிராமப்புறங்கள், காடுகள் மற்றும் கடல்கள் போன்ற தெளிவான முகவரிகள் இல்லாத இடத்தில் இது பேருதவியாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளது.

மேலும், Financial Express Tech Bytes என்ற ஊடகம் கடந்த ஜூன் 8ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தியில், பழைய 6 இலக்க பின் (PIN) முறையை டிஜிபின் மாற்றுமா என்று எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு, “இல்லை, பாரம்பரிய 6 இலக்க பின் முறையை டிஜிபின் மாற்றாது. புதிய 10 எழுத்துகள் கொண்ட எண்ணெழுத்து குறியீடு தற்போதுள்ள அஞ்சல் முகவரிகளை விட கூடுதல் துல்லிய அடுக்காக செயல்படும் என்று அரசு அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Financial Express Tech Bytes வெளியிட்டுள்ள செய்தி
Financial Express Tech Bytes வெளியிட்டுள்ள செய்தி

மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்திய தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிஜிபின் தொடர்பாக விரிவான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் டிஜிபின் பழைய முகவரி முறையை மாற்றாது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள டிஜிபின் முறையால் பழைய பின்முறை முடிவுக்கு வரப்போவதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் டிஜிபின் கூடுதல் துல்லிய அடுக்காக செயல்படுமே தவிர பழையை நடைமுறையை மாற்றாது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in