சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதாகவும், அதை விசிக நிர்வாகி ஒருவர் தட்டிக்கேட்டதாகவும் செய்தி வெளியானது. இந்நிலையில், “தீட்சிதர் அணி எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் அல்ல. சிதம்பரம் கோவிலே ஸ்டேடியமாக மாறியது. சிவன் மேல பந்து பட்டா சிக்ஸ்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடினர் என்று கூறி இதனை பரப்பி வருகின்றனர்
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2023ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி Lokmat Times என்ற ஊடகம் இதுகுறித்து செய்தி வெளியிட்டிருந்தது.
அதில், ஜூன் 6 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வெங்கடேஷ் ஐயர், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் பாரம்பரிய உடையில் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். 28 வயதான கிரிக்கெட் வீரர், இளம் மாணவர்களுடன் உரையாடுவதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள வேத பாடசாலைக்கு சென்றார்.
இன்ஸ்டாகிராமில், வெங்கடேஷ் ஐயர் இளம் வேத பாடசாலை மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதைக் காணும் காணொலியைப் பகிர்ந்துள்ளார். "விளையாட்டின் மீதான காதல் நம்பமுடியாதது. காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து இளம் வேத பாடசாலை மாணவர்களுடன் சிறந்த நேரம் இருந்தது" என்று அவர் தனது காணொலியின் கேப்ஷனில் குறிப்பிடப்பட்டுள்ளார். இதே செய்தியை NDTV Sports ஊடகமும் வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, IndiaToday வெளியிட்டுள்ள செய்தியின் படி, கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் சந்திரசேகர சுவாமி மணிமண்டபத்தில் உள்ள வேத பாடசாலை சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார் என்றும் மாணவர்கள் தங்களுடன் விளையாடுமாறு அவரிடம் கேட்டதற்கு அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக சிதம்பரம் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள் என்று வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் காஞ்சிபுரம் சந்திரசேகர சுவாமி மணிமண்டபத்தில் உள்ள வேத பாடசாலை சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது எடுக்கப்பட்ட காணொலி என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.