அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. இதில், டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்நிலையில், “235 ஆண்டு வரலாற்றில் எந்த அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரும் இதைச் சொல்லத் துணியவில்லை” என்ற கேப்ஷனுடன் தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் எக்ஸ் பக்கம் காணொளி ஒன்றை சமூக வலைதளங்களில் (Archive) பகிர்ந்துள்ளது. மேலும், பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.
அதில் பேசும் டொனால்ட் ட்ரம்ப், “நான் இந்துக்கள் மற்றும் இந்தியாவில் மிகப்பெரிய ரசிகன். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் வெள்ளை மாளிகையில் இந்தியர்களுக்காகவும் இந்துக்களுக்காகவும் ஒரு உண்மையான நண்பனாக இருப்பேன் என்ற உத்திரவாதத்தை அளிக்கிறேன்.
பல தலைமுறைகளாக இந்தியர்களும் இந்துக்களும் சிலரால் நம்ப முடியாத அளவிற்கு அமெரிக்காவை வலுப்படுத்தி உள்ளனர். உங்களது கடின உழைப்பு, கல்வி மற்றும் நிறுவனங்கள் அமெரிக்காவை வளப்படுத்தி உள்ளது. பாதுகாப்பு இன்றி நாம் செழிப்பைப் பெற முடியாது என்று நமக்குத் தெரியும்.
தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவின் சிறந்த நண்பரான இந்தியாவும் ஈடுபட்டுள்ளதால் அதனை நாங்கள் பாராட்டுகிறோம்” என்கிறார். இதனை சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையின் போது டொனால்ட் ட்ரம்ப் பேசியதாக பரப்பி வருகின்றனர்.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இக்காணொலி பழையது என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியில் ட்ரம்ப் பேசும் சில வார்த்தைகளைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி The Hindu வெளியிட்டிருந்த செய்தியில்.
சனிக்கிழமையன்று (அக்டோபர் 15, 2016) நியூ ஜெர்சியின் எடிசனில் ஒரு இந்து அரசியல் அமைப்பின் பயங்கரவாத எதிர்ப்பு நிதி திரட்டும் கூட்டத்தின் போது குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் இந்து ஆதரவை வெளிப்படுத்தும் பேச்சுக்களை பேசியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அதோடு வைரலாகும் காணொலியில் பேசும் டிரம்பின் முழு உரையும் வெளியிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Business Standard ஊடகமும் அதே தேதியில் வெளியிட்டுள்ளது. இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக 2016ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி Touchdown Media என்ற யூடியூப் சேனலில் ட்ரம்ப் பேசும் வைரலாகும் காணொலி இடம்பெற்றுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் இந்துக்களுக்கு ஆதரவாக பேசினார் என்று வைரலாகும் காணொலி 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையின் போது பேசியது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.