மிக்ஜாம் புயலினால் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்புகிறது. இச்சூழலில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பாக பல்வேறு பொய் செய்திகளும் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், “கேட் பூட்டி இருந்ததால் தண்ணீர் உள்ளே போகவில்லை” என்ற தகவலுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வலதுசாரியினரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2021ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி ADMKofficial என்ற எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இதன்மூலம் இது பழைய புகைப்படம் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
தொடர்ந்து, இப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ஏசியிநெட் தமிழ் 2021ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “முதல்வரின் தொகுதியான கொளத்தூர் முழுவதும் வெள்ளத்தால் மிதந்து கொண்டிருக்கிறது. இதனால் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர் பொதுமக்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வைரலாகும் அதே புகைப்படத்தை பாஜக, அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் கடந்த ஆண்டு பெய்த மழையின் போதும் தவறாக பரப்பி வந்துள்ளனர். இது தொடர்பாக, ஒன் இந்தியா தமிழ் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. கொளத்தூர் பகுதியில் ஏற்பட்ட நீர் தேக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
இறுதியாக, நமது தேடலில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்துள்ளது என்று வைரலாகும் புகைப்படம் பழையது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.