

கோவை தெற்கு மற்றும் மமக தலைவர் ஜஹாங்கிருல்லா போட்டியிடும் பகுதிகளில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட உள்ள தங்கப் பொருட்கள் என்று கூறி, உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன
Fact check:
சவுத் செக் நடத்திய ஆய்வில், வைரலாகும் அந்தப் புகைப்படம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நகைக்கடையின் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிப் புகைப்படம் (Mockup image) என்பது கண்டறியப்பட்டது.
புகைப்படத்தின் உண்மைத்தன்மையை கண்டறிய அதனை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் (Reverse Image Search) முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, அமெரிக்காவில் இயங்கி வரும் 'ஜெயின் வின்' (Jane Win) என்ற நகைக்கடையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தப் புகைப்படம் இடம்பெற்றிருப்பது உறுதியானது.
அந்தப் புகைப்படம் 14 கேரட் தங்கம் பூசப்பட்ட அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட 'உதயசூரியன்' (Rising Sun) வடிவமைப்பிலான ஒரு டாலர் ஆகும். இந்த நிறுவனம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள 'வேய்ன்' (Wayne) என்ற இடத்தில் இயங்கி வருகிறது.
இதே புகைப்படம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதியே 'Jane Win' நகைக்கடையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, கோவை தெற்கு மற்றும் ஜஹாங்கிருல்லா போட்டியிடும் தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் வழங்கப்படுவதாகப் பரவும் புகைப்படம் தவறானது. இது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நகைக்கடை இணையதளத்தில் விற்பனைக்காகப் பதிவிடப்பட்ட டாலர் ஆகும். இதற்கும் தமிழகத் தேர்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.