மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 200 கிலோ தங்கத்தால் ஆன மீனாட்சி அம்மனின் சிலை வைக்கப்பட்டு இருப்பதாகவும் மீனாட்சி அம்மனுக்கு வருடம் ஒருமுறை செய்யப்படும் தங்கபுடவை அலங்காரம் என்றும் கூறி சமூக வலைதளங்களில் காணொலி மற்றும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலியில் இருக்கும் மீனாட்சி அம்மனின் சிலை தனியார் நகைக்கடையில் வைக்கப்பட்டு இருப்பது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய இதுகுறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Getty Images 2022ஆம் ஆண்டு ஜுன் 12ஆம் தேதி இதுகுறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “மதுரை மீனாட்சி அம்மன் கோவில் (அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்) அருகில் உள்ள நகைக்கடையில் 210 கிலோ தூய தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் சிலை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து கிடைத்த தகவலைக்கொண்டு தேடுகையில் Chemmanur International Jewellers Madurai என்ற பேஸ்புக் பக்கத்தில், “மதுரை மீனாட்சி அம்மனின் சிலை, 210 கிலோ தங்கம் மற்றும் வெள்ளியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆசிர்வதிக்கப்பட்ட இச்சிலை எங்கள் ஷோரூமில் வைக்கப்பட்டுள்ளது” என்ற தகவலுடன் வைரலாகும் காணொலியில் உள்ள சிலையுடன் காணொலி ஒன்றை 2020ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி பதிவிட்டு இருந்தது. அதே பக்கத்தில் இது தொடர்பான பல்வேறு காணொலிகளும் பதிவிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இச்சிலை மதுரையில் உள்ள செம்மனுர் நகைக்கடைக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலினுள் உள்ள 200 கிலோ எடையுள்ள மீனாட்சி அம்மனின் தங்க சிலை என்று வைரலாகும் காணொலியில் இருப்பது மதுரையில் உள்ள தனியார் நகைக்கடையில் வைக்கப்பட்டுள்ள 210 கிலோ தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன மீனாட்சி அம்மனின் சிலை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.