
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக அரசு செய்தி தொடர்பாளர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். இந்நிலையில், “திமுக ஐடி விங் வெளியிட்ட வீடியோவை கரூர் துயரத்திற்கு ஆதாரமாகக் காட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி திருமதி. அமுதா அவர்கள் திமுக ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டாரா?” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்றை பாஜக ஐடி விங் பரப்பி வருகிறது.
அதில், தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்திக்கிறார். அந்த காணொலியை திமுக ஐடி விங் செப்டம்பர் 30ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. திமுக வெளியிட்டுள்ள காணொலியை ஐஏஎஸ் அதிகாரி அமுதா செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கோள் காட்டி பேசுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் புஸ்ஸி ஆனந்தின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான காணொலியை திமுக ஐடி விங் வெளியிடுவதற்கு முன்பாகவே தவெக நிர்வாகி பதிவிட்டுள்ளார் என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசக்கூடிய காணொலியின் ஒரு பகுதியை மட்டும் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பாஜக ஐடி விங் குறிப்பிடப்பட்டுள்ள அதே காணொலியை கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி தவெகவின் சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் Dr.T.K பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளார்.
மேலும், காணொலியை கவனமாக ஆய்வு செய்கையில் திமுக ஐடி விங் மற்றும் தவெக மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள காணொலிகள் இரண்டிலுமே மாவட்ட செயலாளர் Dr.T.K பிரபுவின் புகைப்படம் காணொலியின் வலதுபுற மேல்முனையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் அரசு செய்தி தொடர்பாளர் அமுதா திமுக ஐடி விங் வெளியிட்ட காணொலியை ஆதாரமாகக் கொண்டு கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தார் என்று பாஜக குறிப்பிடும் இந்த காணொலி கடந்த செப்டம்பர் 26ஆம் தேதியே தவெகவின் சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்று தெரியவந்தது.