

சமீப காலமாக ஒரு காணொலி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் காணொலியில் மெக்காவில் உள்ள கஃபா மீது வாசனை திரவியம் பூசப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஹஜ் புனிதப் பயணத்தின் போது இஸ்லாமியர்கள் கஃபாவைத் தொட்டு முத்தமிடுவதால், கிருமிகள் அல்லது நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக சவுதி அரேபிய அரசு இவ்வாறு அதன் மீது சென்ட் (வாசனை திரவியம்) தெளிப்பதாகப் பலரும் அந்தத் தகவலைப் பகிர்ந்து வருகின்றனர்.
Fact Check:
சவுத்செக் ஆய்வில் இத்தகவல் தவறானது என்று தெரியவந்தது. இது வழக்கமான நடைமுறை என்றும் தெரியவந்தது.
இந்தக் குறிப்பிட்ட காணொலி மற்றும் அது தொடர்பான செய்திகளை விரிவாக ஆய்வு செய்தது. ஹஜ் பயணிகள் முத்தமிடுவதால் உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இது செய்யப்படவில்லை என்பது எங்கள் ஆய்வில் உறுதியாகிறது. கஃபாவைச் சுத்தம் செய்வதும், அதன் மீது 'ஊத்' (Oud), கஸ்தூரி, மற்றும் ரோஜா நீர் கலந்த விலையுயர்ந்த நறுமண திரவியங்களைப் பூசுவதும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறும் ஒரு வழக்கமான பராமரிப்புப் பணியாகும். கஃபாவைச் சுத்தமாக வைத்திருப்பதும் நறுமணத்தோடு பராமரிப்பதும் ஒரு புனிதமான மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இது குறித்த தெளிவான புரிதலைப் பெற சவுத்செக் மூன்று முக்கிய ஆதாரங்களைச் திரட்டியது. முதலாவதாக, சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சவுதி பிரஸ் ஏஜென்சி (SPA) கஃபாவைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மற்றும் நறுமணம் ஊட்டும் பாரம்பரியம் குறித்த விரிவான தகவல்களைத் தொடர்ந்து வெளியிட்டு இந்த நடைமுறையை உறுதி செய்துள்ளது.
இரண்டாவதாக, பிரபல ஊடகமான அரப் நியூஸ் (Arab News) கஃபாவிற்கு நறுமணம் ஊட்டும் இந்தச் சிறப்புப் பணி எவ்வாறு ஒரு தொடர்ச்சியான மற்றும் மரியாதைக்குரிய பராமரிப்புச் செயல்முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைப் பலமுறை செய்தியாக வெளியிட்டுள்ளது.
மூன்றாவதாக, Haramain இத்தகைய தூய்மைப்படுத்தும் மற்றும் வாசனை திரவியம் பூசும் பணிகள் தினசரி மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடைபெறும் வழக்கமான நடைமுறைகள் என்பதைத் தங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது இது ஒரு வழக்கமான நிகழ்வு என்பது தெளிவாகிறது.
Conclusion:
ஆகவே, கஃபாவை மக்கள் முத்தமிடுவதால் மட்டும் அதன் மீது சவுதி அரசு அவசரமாக வாசனை திரவியம் தெளிப்பதாகப் பரவும் தகவல் முற்றிலும் தவறானது. சமூக வலைத்தளங்களில் பரவும் அந்தக் காணொலி கஃபாவின் தினசரி மற்றும் தொடர்ச்சியான பராமரிப்புப் பணிகளின் ஒரு பகுதியையே காட்டுகிறது.