Fact Check: வங்கதேசத்தில் புர்கா அணியாத இந்து பெண்கள் தாக்கப்பட்டனரா?
“இஸ்லாமிய வெறியர்கள் கைப்பற்றிய பங்களாதேஷில் உள்ள ஒரு நகரத்திலிருந்து ஒரு பரிதாபகரமான காட்சி. ஒரு வெறியர் நகரம் முழுவதும் ஓடி, புர்கா அணியாமல் நடந்து செல்லும் இந்து பெண்களை அடிக்கிறார். இதை யாரும் எதிர்க்கவில்லை. அந்தப் பெண்ணுக்கு இவ்வளவு செய்த பிறகும் கூட, அருகில் நிற்கும். ஒரு நபர் கூட இந்த ஜிகாதிக்கு எதிராக எதிர்வினையாற்றவில்ல ஜிகாதிகள் பெரும்பான்மையாக மாறிவரும் நம் நாட்டில் எதிர்காலத்தில் இவை அனைத்தையும் எதிர்பார்க்கலாம். முஸ்லிம் கட்சிகளை ஆதரிக்கும் திராவிடகட்சியில் உள்ள நடுநிலை நக்கி இந்துக்களே நாளை உங்கள் வீட்டிலும் பெண்களுக்கும் இதே நிலைதான்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், நீல நிற டி-சர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் சாலையின் ஓரத்தில் நிற்கும் பெண்களை தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அவர் புர்கா அணியாத இந்து பெண்களை தாக்குவதாக கூறி இதனை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியில் உள்ள Islamic Media TV என்ற வார்த்தையை பேஸ்புக்கில் தேடிப் பார்த்தோம். அப்போது, Islamic Media TV என்ற பேஸ்புக் பக்கம் வைரலாகும் காணொலியை பதிவிட்டிருந்தது. அதில், “தயவு செய்து கடைசி வரை கருத்து சொல்ல வேண்டாம். இந்த துணியை அணிந்த பெண்ணை கண்டால் கொன்று விடுங்கள்.
இது உங்கள் மதப் பொறுப்பு. ராணுவ காவல்துறையினர் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். முடிவைப் பார்க்கும் வரை கருத்து தெரிவிக்க வேண்டாம். தயவு செய்து என்னை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். முடிந்தவரை காணொலியை பகிருங்கள். அனைவரும் விழிப்புடன் இருக்க மின்னல் வேகத்தில் பகிரவும். ஷியாமலி சதுக்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள “ஷியாமலி சதுக்கம்” என்ற சொல்லை பயன்படுத்தி கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “தாக்குதலுக்கு உள்ளான பாலியல் தொழிலாளர்கள்” என்ற தலைப்பில் The Daily Star ஊடகம் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, 50 வயதான முன்னாள் பாலியல் தொழிலாளி ஷாஹிதா, தற்போது ஹெச்ஐவி தடுப்பு மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கான சிகிச்சை சேவைகள் குறித்த அஹ்சானியா மிஷன் திட்டத்திற்கான கள அதிகாரியாக பணிபுரிகிறார். இவர் ஆகஸ்ட் 29 அன்று தலைநகரில்(தாகா) உள்ள ஷியமலி பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்டார்.
"அப்பகுதியில் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு ஆணுறைகளை விநியோகித்த பிறகு, நான் ஒரு மொபைல் ரீசார்ஜ் கடையின் முன்பு நின்று கொண்டிருந்தேன். அப்போது, நீல நிற டி-ஷர்ட் மற்றும் முகமூடி அணிந்த ஒருவர் திடீரென்று பச்சை நிற பைப்புடன் என்னை அடிக்கத் தொடங்கினார்" என்று ஷாஹிதா விவரித்தார். இச்சம்பவம் முழுவதையும் காட்சிப்படுத்திய அந்நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எச்.எம். ரசல் சுல்தான் என்கிற டோகானி ரசல் என்பவர் இத்தாக்குதலை நடத்தியுள்ளார். இவர் மற்றொரு பாலியல் தொழிலாளியை தாக்குவதற்காக ஓடுவதும் அதே காணொளியில் பதிவாகியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை The Business Standard என்ற ஊடகமும் வெளியிட்டுள்ளது. நமக்கு கிடைத்திருக்கும் தகவலின் மூலம் காணொலியில் உள்ள நபர் பாலியல் தொழிலாளர்களை தாக்குவது தெளிவாகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக புர்கா அணியாத இந்து பெண்களை தாக்கும் இஸ்லாமியர் என்று வைரலாகும் தகவல் தவறானது உண்மையில் அது பாலியல் தொழிலாளர்களை தாக்கும் காட்சி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.