Fact Check: பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு பாகிஸ்தானின் அணுசக்தி கட்டுப்பாட்டு மையம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதா? உண்மை அறிக

பாகிஸ்தானின் அணுசக்தி கட்டுப்பாட்டு மையம் மீது இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக காணொலி வைரலாகி வருகிறது
பாகிஸ்தானின் அணுசக்தி கட்டுப்பாட்டு மையத்தை பிரம்மோஸ் ஏவுகணையைக் கொண்டு தாக்கிய இந்தியா
பாகிஸ்தானின் அணுசக்தி கட்டுப்பாட்டு மையத்தை பிரம்மோஸ் ஏவுகணையைக் கொண்டு தாக்கிய இந்தியா
Published on
2 min read

பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட துல்லியமான தாக்குதல்களில் பிரம்மோஸ் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கடந்த மே 12ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, “இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானின் NCA தலைமையகத்திற்கு அடுத்துள்ள அணுசக்தி கட்டளை மையத்திற்கு அருகில் விழுந்தது. இந்தத் தாக்குதலால் இஸ்லாமாபாத் மிகவும் அதிர்ச்சியடைந்து, தலையிடக் கோரி அமெரிக்காவிற்கு ஓடினர். பாகிஸ்தானில் மருத்துவ அவசரநிலை, அணு கதிர்வீச்சு பரவி வருகிறது” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதாவது, இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையின் உதவியுடன் பாகிஸ்தானில் உள்ள அணுசக்தி கட்டுப்பாட்டு மையம் தாக்கப்பட்டதாக இக்காணொலி பகிரப்பட்டு வருகிறது.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி யேமன் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பானது என்று தெரியவந்தது. 

வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, RussiaNews என்ற எக்ஸ் பக்கத்தில் கடந்த மே 7ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், யேமனின் சனா விமான நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் மூன்று யேமனிய விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்டு சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Reuters இத்தாக்குதல் தொடர்பாக கடந்த மே 7ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பின்னர், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக இஸ்ரேலிய ராணுவம் யேமனின் சனாவில் உள்ள முக்கிய விமான நிலையத்தின் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஹவுத்தி நடத்தும் அல்-மசிரா தொலைக்காட்சியின்படி, சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை BBC ஊடகமும் வெளியிட்டுள்ளது.

Reuters வெளியிட்டுள்ள செய்தி
Reuters வெளியிட்டுள்ள செய்தி

மேலும், வைரலாகும் காணொலியுடன் Yemen Today (0:57 பகுதியில் வைரலாகும் காணொலியைக் காணலாம்) என்ற ஊடகமும் கடந்த மே 8ஆம் தேதி இத்தாக்குதல் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. ஹவுத்திகளின் ஊடகமான Al-Masirahவும் இத்தாக்குதல் தொடர்பான காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த மே 6ஆம் தேதி பதிவிட்டுள்ளது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் பாகிஸ்தானின் அணுசக்தி கட்டுப்பாட்டு மையம் மீது பிரம்மோஸ் ஏவுகணையின் உதவியுடன் இந்தியா தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையில் யேமனின் சனா விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தொடர்பான காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in