
“இந்தியா ரயில் பாதைகளை மின் உற்பத்தி நிலையங்களாக மாற்றுகிறது. நிலையான உள்கட்டமைப்பிற்கான ஒரு மாற்றமான நடவடிக்கையாக, இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனமான சன்-வேஸ், ரயில் பாதைகளுக்கு இடையில் நேரடியாக நீக்கக்கூடிய சோலார் பேனல்களைப் பயன்படுத்துகிறது. கூடுதல் நிலம் தேவையில்லை ரயில் சேவைகளுக்கு இடையூறு இல்லை. இந்த அணுகுமுறை ஆண்டுதோறும் 1 டெராவாட்-மணி நேரத்திற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும், இது 200,000 வீடுகளுக்கு மேல் மின்சாரம் வழங்கும்” என்ற தகவலுடன் இந்திய ரயில்வே ரயில் தண்டவாளங்களுக்கு நடுவே சோலார் பேனல்களை அமைத்து வருவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் இத்திட்டம் சுவிட்சர்லாந்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.
உண்மையில் இத்திட்டம் இந்திய ரயில்வேயில் அமல்படுத்தப்பட்டுள்ளதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, Indonesia Business Post என்ற இணையதளத்தில் கடந்த மே 20ஆம் தேதி வைரலாகும் அதே புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சுவிஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான சன்-வேஸ், ரயில் தண்டவாளங்களுக்கு நடுவே நிறுவக்கூடிய ஒரு புதுமையான சோலார் பேனல் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடுகையில், கடந்த மே 18ஆம் தேதி swissinfo.ch வெளியிட்டுள்ள செய்தியின் படி, சுவிட்சர்லாந்தின் பட்ஸ் பகுதியில் உள்ள 100 மீட்டர் நீளமுள்ள ரயில் தண்டவாளத்தில் அகற்றக்கூடிய சோலார் பேனல்கள் தற்போது சோதனைக்காக பொருத்தப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள 5,320 கிலோமீட்டர் ரயில் நெட்வொர்க்கில் ஆண்டுதோறும் 1 பில்லியன் கிலோவாட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று சன்-வேஸ் மதிப்பிடுகிறது. இது நாட்டின் மொத்த மின்சார நுகர்வில் 2 சதவீதத்திற்கு சமம். அது சுமார் 300,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமானதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது போன்ற ஒரு திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து கூகுளில் தேடுகையில் அவ்வாறான எந்த ஒரு அறிவிப்போ செய்தியோ வெளியாகவில்லை என்று தெரியவந்தது.
Conclusion:
ரயில் தண்டவாளங்களுக்கு நடுவே சோலார் பேனலை பொருத்தி மின்சாரம் தயாரிக்கும் இந்திய ரயில்வே என்று வைரலாகும் தகவல் தவறானது. உண்மையில் இத்திட்டம் சுவிட்சர்லாந்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று நம் தேடலில் தெரியவந்தது.