
ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஏராளமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், “ஈரான் தலைவர்கள் குடும்பத்தினர்கள் உயர் அதிகாரிகள் குடும்பத்தினர்கள் ஈரான் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்… முஸ்லீம் ஆட்சி முடிவுக்கு வருகிறது” என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் காணொலி பழையது என்றும் தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மைத் தன்மையை கண்டறிவதற்காக அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Travel with Hojabr என்ற யூடியூப் சேனலில் 2023ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி, Imam Khomeini International Airport என்று வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது.
ஆனால், வைரலாகும் காணொலி 11 வினாடியும் யூடியூப் சேனலில் உள்ள காணொலி 7 வினாடியும் ஓடக்கூடியவையாக இருந்தன. இதன் மூலம் வைரலாகும் காணொலி கூடுதலாக நான்கு வினாடிகள் டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து தேடுகையில் இஸ்ரேல் தாக்குதலின் காரணமாக ஈரான் தனது வான்வெளியை மறு அறிவிப்பு வரும் வரை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. இச்சூழலில் அந்நாட்டில் இருந்து விமானம் மூலமாக வேறொரு நாட்டிற்கு செல்வதற்கான வாய்ப்பு இல்லை. மேலும் அங்கிருந்து செல்லக்கூடிய விமானங்களின் சேவையை பல்வேறு விமான நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதும் செய்தி வாயிலாக தெரிய வருகின்றது.
Conclusion:
இஸ்ரேலின் தாக்குதலால் ஈரான் நாட்டின் தலைவர்கள் குடும்பத்தினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குடும்பத்தினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக வைரலாகக் கூடிய காணொலி 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் அது டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது.