
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் வலுத்து வரும் சூழலில் இஸ்லாமிய பள்ளி மாணவிகள் ஹிஜாபை கழற்றி போராட்டத்தில் ஈடுபடுவதாக காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், “ஈரானில் பள்ளி செல்லும் மாணவிகள் தங்களின் ஹிஜாப்பை கழட்டி எறிந்து விட்டு சர்வாதிகாரிக்கும், அடக்குமுறை இஸ்லாமிய ஆட்சிக்கும் முடிவு கட்டவும் என்று முழக்கமிடுகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இது 2022ஆம் ஆண்டு மஹ்ஸா அமினி என்ற பெண் ஈரான் ஒழுக்க காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டதாக கூறி நடந்த போராட்டம் தொடர்பான காணொலி என்று தெரியவந்தது.
உண்மையில் ஈரானுக்கு எதிராக பள்ளி செல்லும் மனைவிகள் தங்களது ஹிஜாபை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனரா என்பதை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Grupo REFORMA என்ற ஸ்பானிஷ் ஊடகம் தனது யூடியூப் சேனலில் வைரலாகும் அதே காணொலியை 2022ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி பதிவிட்டுள்ளது.
அதன் டிஷ்கிரிப்ஷன் பகுதியில், “ஈரானில் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் பல்கலைக்கழக மற்றும் பள்ளி வகுப்பறைகளுக்கும் பரவியுள்ளன, அங்கு மாணவர்கள் தங்கள் ஹிஜாப்களை அகற்றியுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முதற்கட்டமாக வைரலாகும் காணொலி பழையது என்று தெரியவருகிறது.
அதன்படி, மஹ்ஸா அமினி என்ற பெண் ஹிஜாப் சரியான முறையில் அணியாததற்காக ஈரானின் ஒழுக்க காவல்துறையினரால் (Moral Police) செப்டம்பர் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதன்பின் மூன்று நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தார். அதிகாரிகள் அமினியின் தலையில் தாக்கி, வாகனத்தில் தலையை மோதியதாக அமினியின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இவ்வாறு அமினி நடத்தப்படவில்லை என்று மறுத்துள்ள காவல்துறை, மாறாக அவருக்கு "திடீர் மாரடைப்பு" ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர். மஹ்ஸா அமினி ஈரான் ஒழுக்க காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டதாக கூறி நாடெங்கிலும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போராட்டம் நடைபெற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
2022ஆம் ஆண்டு மஹ்ஸா அமினி என்ற பெண் ஹிஜாப் சரியான முறையில் அணியாததற்காக ஈரான் நாட்டின் ஒழுக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் அப்பெண் இருந்தபோதே இறந்ததற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற போராட்டத்தின் காணொலியை ஈரானில் நடைபெற்று வரும் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக பள்ளி மாணவிகள் தங்கள் ஹிஜாபை கழற்றி போராட்டத்தில் ஈடுபடுவதாக தவறாகப் பரப்பி வருகின்றனர் என்று நம் தேடலில் தெரிய வருகிறது.