

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வன்முறை வெடித்ததை அடுத்து அங்கு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் (Archive) தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் இது உண்மை இல்லை என்று தெரியவந்தது.
வைரலாகும் இச்செய்தி குறித்து கூகுளில் தேடினோம். அப்போது, வங்கதேச ஊடகமான Dhaka Tribune ஊடகத்தில் கடந்த நவம்பர் 30ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதில் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், Al Jazeera ஊடகமும் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா நுரையீரல் தொற்று காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும், அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவருடைய மகனும், வங்கதேச தேசியவாத கட்சித்தலைவருமான தாரிக் ரஹ்மான், தனது தாயார் கலிதா ஜியோ உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியா, உடல்நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவக் குழு மிக உயர்ந்த தொழில்முறை மற்றும் சேவையை மிகுந்த நேர்மையுடன் வழங்கி வருவதாகவும், கலீதா ஜியா மீது காட்டப்படும் உண்மையான பிரார்த்தனைகள் மற்றும் அன்புக்கு அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரான கலிதா ஜியாவின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, ஷேக் ஹசீனா மருத்துவமனையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. உண்மையில் ஷேக் ஹசீனா மோசமான உடல் நிலையில் இருப்பதாக எந்த ஒரு தகவலும் இல்லை.