
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்குடன், அந்நாட்டின் அணுசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதைத் தொடா்ந்து, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ வீரர் ஈரானிடம் போரை நிறுத்துமாறு கெஞ்சுவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஈரான், தாக்குதலை நிறுத்துங்கள் என உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம். பாதி இஸ்ரேல் அழிந்துவிட்டது. நாங்கள் சரணடைகிறோம்” என்று கூறுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை உண்மை என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
முதலில், காணொலியின் தன்மையை ஆராய்ந்தபோது, அதில் பேசக்கூடிய ராணுவ வீரர் நாடகத்தனமாக கையில் மைக்குடன் பேசுவது தெரிகிறது. உண்மையான போர்க்களத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெற சாத்தியம் இல்லை. மேலும், காணொலியில் பேசக்கூடிய ராணுவ வீரருக்கு பின்னால் காயமுற்றுக்கிடக்கும் மற்றொரு ராணுவ வீரர் காணொலியின் கடைசி பகுதியில் சிரிப்பது தெரிகிறது.
மேலும், காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Our.thoughts என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் இதே காணொலி வெளியிடப்பட்டிருந்தது. அதன் வலது புற கீழ் முனையில் Veo என்று எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்காணொலி கூகுளின் AI வீடியோ ஜெனரேட்டரான Veoவில் உருவாக்கப்பட்டது என்பதை அறியமுடிகின்றது.
தொடர்ந்து, காணொலியை DeepFake - O - Meter இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில், எட்டில் நான்கு டிடெக்டர்கள் 93% முதல் 100% வரை வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடிவைத் தந்தன.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஈரானிடம் போரை நிறுத்துமாறு கெஞ்சக்கூடிய காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.