Fact Check: ஈரானுடனான போரை நிறுத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்டனரா இஸ்ரேலியர்கள்? உண்மை அறிக
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரானின் அணு ஆயுதத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 24) இஸ்ரேலும் ஈரானும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டன.
இந்நிலையில், “ஈரான் எங்களை மன்னித்து விடு போரை நிருத்துங்கள் நாங்கள் அமைதியை விரும்புகிறோம் தயவுசெய்து போரை நிருத்துங்கள் என்று வீதியில் இறங்கிவிட்டனர் இஸ்ரேல் மக்கள். இதைத்தான் எல்லோரும் கேட்கிறோம் போர் வேண்டாம்…” என்ற கேப்ஷனுடன் இஸ்ரேல் மக்கள் அந்நாட்டு கொடியுடன் வீதியிலிறங்கி போராடக்கூடிய காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகப் பரவி வருகிறது.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
காணொலி குறித்த உண்மை தன்மையை கண்டறிய அதனை முதலில் ஆராய்தோம். அப்போது, அக்காணொலியில் முன் வரிசையில் நீல நிற டி சர்ட் அணிந்து நிற்கும் நபரின் கையில் முதலில் இஸ்ரேலின் கொடி இல்லை. இரண்டாவது நொடியில் திடீரென அவரது கையில் இஸ்ரேலின் கொடி தோன்றுகிறது. இதனைக் கொண்டு முதற்கட்டமாக இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரிய வருகிறது.
தொடர்ந்து காணொலியின் வலது பக்கம் கீழ் முனையில் Veo என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்காணொலி கூகுளின் AI வீடியோ ஜெனரேட்டரான Veoவில் உருவாக்கப்பட்டது என்பதை அறியமுடிகின்றது.
இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக Deep Fake - O - Meter என்ற இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில் 10ல் 6 டிடெக்டர்கள் 74% முதல் 100% வரை வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடிவைத் தந்தன.
Conclusion:
நம் தேடலின் முடிவாக ஈரானுடனான போரை நிறுத்தும்படி கெஞ்சி வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேலிய மக்கள் என்று வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.