
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த மார்ச் 27ஆம் தேதி துவங்கியது. அப்போது, மானிய கோரிக்கையில் விளையாட்டு மேம்பாடு சிறப்புத் திட்ட செயலகத் துறை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வராததால் அவருக்கு பதிலாக முதல்வர் ஸ்டாலின் மானிய கோரிக்கையை தொடங்கி வைத்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவர்கள் கட்டாய ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதாக கூறி மானிய கோரிக்கையை முதல்வர் முன்வைத்தார்.
இந்நிலையில், “250 கோடி கார் ரேஸ் எல்லாம் தமிழகத்தின் தலைவிதி. தேசிய அளவில் கபடி விளையாடும் ஏழை வீராங்கனைக்கு ஒழுங்கா சாப்பாடு கூட கொடுக்க துப்பில்ல இந்த லட்சன கூந்தல்ல தமிழக விளையாட்டு துறையை உலக அளவில் தூக்கி நிறுத்துவாராம், துறை அமைச்சருக்கு ஓய்வு வேற” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) “நீயா நானா” நிகழ்ச்சியின் காணொலி வைரலாகி வருகிறது.
காணொலியில் பேசும் வீராங்கனை, “மூன்று வேளை சாப்பிட்டாலே நான் கண்டிப்பாக சாதிப்பேன். அப்பாவால் வேலை செய்ய முடியாது அம்மா தான் எல்லாமே” என்கிறார். தொடர்ந்து அவரிடம் “நீங்க என்ன விளையாடுறீங்க” என்று கேள்வி எழுப்பினார் கோபிநாத். அதற்கு, “கபடி” என்று பதிலளித்தார் வீராங்கனை.
தொடர்ந்து, “சாப்பிடாமல் என்றாவது போட்டிக்கு சென்றுள்ளீர்களா?” என்று கோபிநாத் கேள்வி எழுப்பவே, அவ்வாறு சென்றுள்ளதாக கூறுகிறார் தேசிய அளவில் கபடி விளையாடும் வீராங்கனை. மேலும், “நமக்கென்று எதுவும் இல்லை. நமக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லை. விளையாடியாவது முன்னேறலாம் என்பதால் தான் தொடர்ந்து விளையாடுகிறேன்” என்கிறார் அவ்வீராங்கனை. இது திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது எடுக்கப்பட்ட காணொலி என்று தெரியவந்தது.
இதுகுறித்த உண்மை தன்மையை கண்டறிய வைரலாகும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2018ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி வைரலாகும் காணொலியில் இருக்கக்கூடிய கபடி வீராங்கனை பங்கேற்ற “நீயா நானா” நிகழ்ச்சியின் ப்ரோமோ விஜய் டிவியின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இதுதொடர்பாக கூகுளில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Neeya Naana Season 23 Episode 81 Jio Hotstarல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் 21:20 பகுதியில் வைரலாகும் காணொலியில் இருக்கக்கூடிய அதே கபடி வீராங்கனை பேசக்கூடிய காட்சி இடம்பெற்றுள்ளது. அதில், தான் வேலூர் மாவட்டம் ஏரிகுத்தி என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்று விளக்குகிறார் கபடி வீராங்கனை.
மேலும், இந்நிகழ்ச்சி 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் அவ்வாண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இவற்றின் மூலம் வைரலாகும் காணொலி பழையது என்றும் திமுக ஆட்சியில் நடைபெறவில்லை என்றும் தெரியவருகிறது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் கபடி வீராங்கனை வறுமையில் கஷ்டப்படுவதாகவும் இத்தகைய சூழலில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு ஓய்வு தேவையா என்றும் கூறி சமூக வலைதளங்களை வைரலாகும் காணொலி 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.