2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி அன்று கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இந்நிலையில், வயது முதிர்ந்த தோற்றத்தில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவர் தமிழீழ விடுதலை குறித்து பேசியது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய பிரபாகரன் உயிருடன் இருப்பது குறித்து ஆங்கிலம், தமிழ், சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, சமீபத்தில் அது தொடர்பான எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
மேலும், காணொலியை ஆராய்ந்து பார்த்தோம். அப்போது, அவரது தலைப்பகுதி மட்டும் அசைவதும் உடல் பகுதி அசைவின்றி இருப்பதும் தெரியவந்தது. இதனைக் கொண்டு இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற சந்தேகம் எழுந்தது.
இந்தியாவைச் சேர்ந்த Misinformation Combat Alliance (MCA) உடைய Deepfake Analysis Unit(DAU) காணொலியை ஆய்வு செய்தது. முதலில் அதில் உள்ள ஆடியோவை Locus.ai உதவியுடன் ஆய்வு செய்ததில் ஆடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது. அதேபோன்று, Trumediaவைக்கொண்டு முகம் மற்றும் ஆடியோவை ஆய்வு செய்ததிலும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், Hive AI உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் காணொலியின் சில பகுதிகள் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்றே முடிவு கிடைத்தது. இவற்றைக் கொண்டு வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வயது முதிர்ந்த காணொலி என்று வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.