

“நியூசிலாந்தில், பூர்வீக மாவோரி இனத்தவர்கள் #இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிராகப் போராடி, ஜிஹாதிக் கொடியை அழிக்கின்றனர். நியூசிலாந்து கிறிஸ்தவ நாடு, அமைதி மார்க்கம் அங்கு வரவேற்கப்படுவதில்லை!” என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது.
Fact check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்று தெரியவந்தது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மையை அறிய கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தினோம். அப்போது, "இந்து, சீக்கிய, புத்த மதக் கொடிகள் கிழிக்கப்பட்டு மிதிக்கப்பட்டன: நியூசிலாந்து தீவிரவாதத் தலைவர் குயின் தெருவை (Queen Street) மத சகிப்பின்மைக்கான மேடையாக மாற்றியது எப்படி?" என்ற தலைப்பில் தி எகனாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்திக் கட்டுரை எமக்குக் கிடைத்தது.
அந்தச் செய்தியின்படி, கடந்த ஜூன் 24, 2025 அன்று, ஆக்லாந்தில் கிறிஸ்தவமல்லாத பிற மதங்களைக் குறிவைத்து குடியேற்ற எதிர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற்றது. இதனை 'டெஸ்டினி சர்ச்' (Destiny Church) அமைப்பின் தலைவர் பிரையன் டமாகி (Brian Tamaki) முன்னின்று நடத்தியுள்ளார். இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் இந்து, சீக்கிய, புத்த, இஸ்லாமிய மதக் கொடிகளையும் மற்றும் பாலஸ்தீனியக் கொடியையும் கிழித்து காலால் மிதித்து அவமதித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், குறிப்பிட்ட அந்தச் சமூகங்களுக்கு எதிராகப் பிரிவினையைத் தூண்டும் கருத்துகளையும் டமாகி பேசியுள்ளார். இச்சம்பவம் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு மதக் குழுக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இது ஒரு வெறுப்புணர்வைத் தூண்டும் செயல் என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜூன் 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 'ஸ்டேட்கிராஃப்ட்' (Statecraft) யூடியூப் சேனலில் வெளியான இரண்டு வீடியோக்களை நாங்கள் ஆய்வு செய்தோம். அந்த வீடியோக்களில், பிரையன் டமாகி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே இந்து மற்றும் சீக்கிய மதக் கொடிகளைக் கிழிப்பதைக் காண முடிகிறது.
இதுமட்டுமின்றி, இந்தியா டுடே, ஸ்டஃப், தி ஸ்பின் ஆஃப், ஆர்என்இசட் (RNZ) மற்றும் வாடியா நியூஸ் போன்ற முன்னணி ஊடகங்களும் இச்சம்பவம் குறித்த விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளன.
எனவே, பூர்வீக மாவோரி இனத்தவர்கள் இஸ்லாமியக் குடியேற்றத்திற்கு எதிராகப் போராடி 'ஜிஹாதி' கொடியை அழித்ததாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
உண்மையில், இந்தப் போராட்டத்தை நடத்தியது 'டெஸ்டினி சர்ச்' அமைப்பின் பிரையன் டமாகி ஆவார். நியூசிலாந்தை ஒரு கிறிஸ்தவ நாடாக மட்டுமே முன்னிறுத்த முயன்றதற்காகவும், பிற மதங்களை அவமதித்ததற்காகவும் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். இந்தப் பேரணியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், இந்து, சீக்கிய மற்றும் பௌத்த மதத்தினருக்கு எதிராகவும் வெறுப்புணர்வு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் நியூசிலாந்தில் மாவோரி இன மக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராகப் போராடி கொடிகளை எரித்ததாகப் பரவும் செய்தி தவறானது. இந்தப் பேரணியைத் தலைமை தாங்கி நடத்தியவர் பிரையன் டமாகி. இவர் இஸ்லாமிய மதத்தை மட்டுமன்றி, இந்து, சீக்கிய மற்றும் பௌத்த மதங்களையும் இலக்காகக் கொண்டு, அவற்றின் புனிதக் கொடிகளையும் கிழித்து அவமதித்துள்ளார் என்பதே உண்மை.