
கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் சந்தித்துக் கொண்டனர். இந்நிலையில், “உறவினர் போல் கட்டியணைத்து, ஏதும் பிரச்னைனா கால் பண்ணுங்க என்று மோடி கூறியதும், பதிலுக்கு சிரித்த முகமாய் நன்றி சொன்ன புதின்… மோடி காரில் ஏறியதும் டாட்டா சொல்லி வழியனுப்பும் புதின்.... வல்லரசு ரஷ்ய அதிபரே வணங்கி வழியனுப்பும் நிலையில் நமது விஸ்வகுரு….” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
அதில், பிரதமர் மோடியும் புடினும் கட்டிடம் ஒன்றிலிருந்து வெளியேறி, காரில் ஏறுவதற்கு முன்பு, பிரதமர் மோடி புடினுக்கு நன்றி தெரிவிக்கிறார். அதற்கு புடினும் நன்றி தெரிவிக்கிறார். பிறகு பிரதமர் மோடி, “Anything for me, please let me know" என்று ஆங்கிலத்தில் கூறுவதோடு முடிகிறது. அதற்கு புடின் சரி என்று கூறி, பின்னர் மற்றொரு நன்றியையும் தெரிவிக்கிறார்.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் 2024ஆம் ஆண்டு பிரதமர் மோடி மாஸ்கோ சென்ற போது எடுக்கப்பட்ட காணொலி என்று தெரியவந்தது.
காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, அதன் முழுநீளக் காணொலியை 2024ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி Bloomberg ஊடகம் வெளியிட்டிருந்தது, அதற்கு “இந்தியப் பிரதமர் மாஸ்கோ பயணத்தை முடித்துக்கொண்ட போது புடினும் மோடியும் அரவணைத்துக்கொண்டனர்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
அதன் டிஸ்கிரிப்ஷன் பகுதியில், பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காணொலியில், இந்தியப் பிரதமர், “Anything for me, please let me know" என்று கூறுவது கேட்கிறது. வைரலான காணொலியில் இருப்பதைப் போலவே, புடின் சரி என்று கூறி, அவருக்கு நன்றி தெரிவிக்கிறார்.
மேலும், மாஸ்கோ சென்றபோது புடினுடன் பிரதமர் மோடி இருந்த புகைப்டங்களை 2024ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "இன்று கிரெம்ளினில் ஜனாதிபதி புடினுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றது. வர்த்தகம், பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பை பன்முகப்படுத்துவதற்கான வழிகளை எங்கள் பேச்சுவார்த்தை உள்ளடக்கியிருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டின் போது வைரலாகும் காணொலியில் இருப்பது போன்று பிரதமர் மோடி புடினிடம் அவ்வாறு கூறினாரா என்று கூகுளில் தேடிப் பார்த்தபோது, அவ்வாறாக எந்த ஒரு தகவலும் இல்லை என்று தெரியவந்தது.
Conclusion:
முடிவாக, 2024ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பின் போது பிரதமர் மோடி புடினுக்கு நன்றி தெரிவிக்கும் காணொலியை சீனாவில் நடைபெற்ற மாநாட்டின் போது நடைபெற்றதாக தவறாக பரப்பி வருகின்றனர்.