
“காலையிலேயே ஆரம்பிச்சுட்டானுங்க விடியா ஆட்சியில கொலையொல்லாம் காப்பி குடிக்கிற மாதிரி” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஒருவரை பலரும் சேர்ந்து கொலை செய்யும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும், இந்நிகழ்வு தமிழ்நாட்டில் நடைபெற்றதாகவும் பகிரப்பட்டு வருகிறது.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இச்சம்பவம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியில் உள்ள சம்பவம் உண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்றது தானா என்று கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Meem TV என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “ரெட் ஹில்ஸின் நிலோஃபர் ஹோட்டல் அருகே இளைஞர் அயன் குரேஷி கொலை செய்யப்பட்டதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, கொலை சம்பவம் தொடர்பாக கடந்த மே 16ஆம் தேதி Munsif Daily ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, “ஹைதராபாத்தின் ரெட் ஹில்ஸில் வியாழக்கிழமை (மே 15) பிற்பகல் நடந்த கொடூரமான கொலையில் தொடர்புடைய மூன்று நபர்களை நம்பள்ளி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பழிவாங்கும் நோக்கில் நடைபெற்ற இந்தக் கொலை, 2020ஆம் ஆண்டு நடந்த முந்தைய கொலையுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. அயன் குரேஷி இரண்டு நபர்களால் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டார். ரெட் ஹில்ஸின் பரபரப்பான பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை The Hindu ஊடகமும் கடந்த மே 16ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக தமிழ்நாட்டில் பட்டப்பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் என்று பகிரப்படும் காணொலி உண்மையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.