
“அமைதி மார்க்கத்தின் அட்டுழியம். தெலங்கானா. ஷங்கர்பள்ளி அருகே தண்டவாளத்தில் கார் வேகமாக சென்றது. ஊழியர்கள் உடனடியாக அவரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், அந்த முஸ்லீம் பெண் காரை தண்டவாளத்திலேயே தொடர்ந்து ஓட்டினார். கட்டுப்பாட்டு அறைக்கு ரயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்” என்ற கேப்ஷனுடன் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்க மறுக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இச்சம்பவத்தில் தொடர்புடைய பெண் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் இல்லை என்று தெரியவந்தது.
உண்மையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட பெண் இஸ்லாமியர் தானா என்பதை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “ரயில் தண்டவாளத்தில் பெண் காரை ஓட்டிச் சென்றதால், அவரை வெளியே இழுக்க காவல்துறையினர் போராடினர்” என்ற தலைப்பில் வைரலாகும் அதே காணொலியுடன் கடந்த ஜூன் 26ஆம் தேதி NDTV செய்தி வெளியிட்டுள்ளது. இதே காணொலியுடன் Sakshi TV, NTV Telugu உள்ளிட்ட ஊடகங்களும் அதே செய்தியை வெளியிட்டுள்ளன.
தொடர்ந்து தேடுகையில் The Hindu கடந்த ஜூன் 28ஆம் தேதி இச்சம்பவம் தொடர்பாக விரிவான செய்தி வெளியிட்டு இருந்தது. அதன்படி, கடந்த ஜூன் 26ஆம் தேதி ஷங்கர்பள்ளி அருகே ரயில் பாதையில் தனது காரை கவனக்குறைவாக ஓட்டிச் சென்றதற்காக 34 வயது பெண்ணான வோமிகா சோனி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோவைச் சேர்ந்த இவர் தற்போது ஷங்கர்பள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.
தண்டவாளத்தில் இருந்து மீட்க முயற்சித்தபோது, அப்பெண் அருகில் இருந்தவர்கள் மீது கற்களை வீசியதாகவும், காவல் அதிகாரிகளைத் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் ரயில்வே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார் என்று ஷங்கர்பள்ளி காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் கவுட் தெரிவித்தார்.
சமீபத்தில் தனது ஐடி வேலையை இழந்ததிலிருந்து அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. "Capgeminiல் பணிபுரிந்து வந்த அவர், சமீபத்தில் தனது வேலையை இழந்தார். இதனால் அவர் மனநிலை சரியில்லாமல் இருப்பதாக குடும்பத்தினர் கூறினர். மேலும் பெண் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அவரது மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக” காவல் ஆய்வாளர் கூறினார். சைபராபாத் கமிஷனரேட்டின் ஷங்கர்பள்ளி காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக ஷங்கர்பள்ளியில் இஸ்லாமிய பெண் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தின் மீது காரை நிறுத்தி இறங்க மறுப்பதாக வைரலாகும் தகவலில் இருக்கக்கூடிய பெண்ணின் பெயர் வோமிகா சோனி என்றும் அவர் ஒரு இஸ்லாமியர் இல்லை என்றும் தெரியவருகிறது.