
“சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் தேர்வு எழுதும் அறைக்கு பின்பகுதியில் விலை உயர்ந்த வாக்கிடாக்கி, கேமரா, டேப் மற்றும் இரண்டு பேக் நிறைய உபகரணங்கள் வைத்திருந்த இஸ்லாமிய பெண்… ஹிஜாபின் பயன்கள்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில் வாக்கி டாக்கி, செல்போன் உள்ளிட்ட கருவிகளை வைத்துள்ள ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் ஆட்டோவிற்கு உள்ளே அமர்ந்துள்ள காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இப்பெண் இஸ்லாமியர் இல்லை என்று தெரியவந்தது.
வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது இன்று (ஜூலை 15) ETV Bharat ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, பொதுப் பணி துறையின் துணை பொறியாளருக்கான தேர்வு சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள ராம்துலாரி பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, பள்ளிக்குப் பின்னால் ஆட்டோவில் அமர்ந்திருந்த ஒரு பெண், மைக்ரோஃபோன் பொருத்தப்பட்ட வயர்லெஸ் ஆண்டெனா வழியாக மெதுவாகப் பேசிக் கொண்டிருப்பதைக் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்டனர். இதனால் சந்தேகமடைந்து, காங்கிரஸின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கத்திற்கு (NSUI) தகவல் தெரிவித்தனர்.
NSUI உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணிடம் விசாரித்து ஆட்டோவிற்கு உள்ளே சோதனை செய்தபோது, ஒரு டேப் மற்றும் வயர்லெஸ் ஆண்டெனாவை கைப்பற்றினர். தேர்வு மையத்திற்குள் இருந்த ஒரு தேர்வருடன் அப்பெண் தொடர்பில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. யாரிடம் பேசுகிறீர்கள் என்று மாணவ அமைப்பினர் கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்துள்ளார் அப்பெண். தொடர்ந்து, அளிக்கப்பட்ட தகவலின் பேரில் நேரில் வந்த காவல்துறையினர் அவ்விரு பெண்களையும் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விசாரணையில், தேர்வர் அனு வினாத்தாளை புகைப்படம் எடுத்து ஆட்டோவில் அமர்ந்திருந்த அனுராதாவுக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது, "பொதுப்பணித்துறை தேர்வு நடந்து கொண்டிருந்த போது அங்கு அனுராதா தனது சகோதரி அனுவுக்கு மின்னணு சாதனங்கள் மூலம் உதவி செய்து கொண்டிருந்தார். தேர்வு மைய கண்காணிப்பாளருடன் சேர்ந்து உளவு கேமராவைப் பயன்படுத்தி தேர்வில் ஏமாற்றியதற்காக இரு பெண்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று NSUI உறுப்பினர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது," என்று சர்கந்தா CSP சித்தார்த் பாகேல் தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வைரலாகும் காணொலியில் இருக்கக்கூடிய ஒருபகுதியின் புகைப்படத்துடன் ABP ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், அப்பெண்கள் ஜஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களது முழு பெயர் அனுசூர்யா மற்றும் அனுராதா பாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Amar Ujala ஊடகமும் இதே செய்தியை வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் தேர்வில் வாக்கி டாக்கி, கேமரா உள்ளிட்ட உபகரணங்களின் உதவியுடன் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வைரலாகும் தகவலில் இருக்கக் கூடிய பெண் இஸ்லாமியர் இல்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.