Fact Check: பாஜகவினருக்கு எதிராக பேரணி நடத்தினார்களா இஸ்லாமியர்கள்?
"பீகாரில் 10 ஜமாத்தை சேர்ந்த 1000 இஸ்லாமியர் மட்டும் கலந்து கொண்டு பிஜேபிக்காக செய்த பிரச்சாரம் தான் இது. மோடிக்குஓட்டுபோடாதிங்க பிஜேபி உள்ளவந்துடும்னுனு தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிட கட்சிகளும் பெரியாரிஸ்ட்டுகளும் பிஜேபிக்கு எதிரான சித்தாந்தத்தை உருவாக்கி இஸ்லாமிய சகோதரர்களை மூளை சலவை செய்து பிஜேபிக்கு எதிரான சிந்தனையை உருவாக்குகிறது.. காத்திருங்கள்தமிழகத்தில் திராவிடத்தை கருவறுப்போம்" என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி காட்சி வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி 2024ஆம் ஆண்டு திரிபுரா மாநிலம் பாஜக வேட்பாளர் ஆதரித்து பாஜகவினர் மேற்கொண்ட பேரணி என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மைத் தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, TRIPURAINFOWAY TUNE என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் காணொலி வெளியிடப்பட்டிருந்தது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த காணொலியில், “பிசால்கார்கில் பிப்லவ் தேவிற்காக நடைபெற்ற பேரணி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கிடைத்த தகவல்களை கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, திரிபுரா டைம்ஸ் என்ற ஊடகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டு இருந்தது. கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி வெளியிட்ட அந்தச் செய்தியில், “திரிபுரா மேற்கு நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிப்லப் குமார் தேவுக்கு ஆதரவாக பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக பீகாரில் இஸ்லாமிய ஜமாத்தினர் சேர்ந்து பாஜகவிற்கு எதிராக பேரணி நடத்தியதாக வைரலாகும் காணொலி உண்மையில் 2024ஆம் ஆண்டு திரிபுரா மாநிலத்தில் பாஜக வேட்பாளருக்காக பாஜகவினர் நடத்திய பேரணி என்று தெரியவந்தது.

