

"2050 க்கு பின் எதிர்கால இந்தியா இப்படி பங்களாதேஷ் மாதிரி தான் இருக்கும்... ஹிந்து பெண் வீட்டை இடிக்க வந்த தீவிரவாத முஸ்லிம்களிடமிருந்து காக்க குழந்தையுடன் போராடிய கொடூரம்" என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் காணொலி காட்சி வைரலாகி வருகிறது.
Fact-Check:
சவுத் செக் மேற்கொண்ட விரிவான ஆய்வில், வைரலாகும் காணொலியில் இடிக்கப்படுவது ஒரு இந்துப் பெண்ணின் வீடு அல்ல என்பதும், அது ஒரு இஸ்லாமியக் குடும்பத்திற்குச் சொந்தமானது என்பதும் உறுதியானது.
இந்தச் சம்பவம் வங்கதேசத்தில் நடந்தது உண்மைதான் என்றாலும், அதன் பின்னணி முற்றிலும் வேறானது. காணொலியின் முக்கிய காட்சிகளைப் பிரித்தெடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தபோது, வங்கதேசத்தின் சுனம்கன்ஞ் பகுதியில் தரேக் மியா மற்றும் அலி உசேன் ஆகிய இரு இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதாக 'Deshkal News' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது கண்டறியப்பட்டது.
மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களைத் தேடியபோது, கால்நடைகளைத் திருடிய நபர்களுக்குத் தண்டனை வழங்கும் நோக்கில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்த வீட்டை அடித்து நொறுக்கியதாக 'Banglanews 24' செய்தி நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதேபோல், மார்ச் 25-ம் தேதியே 'Channel24 Digital' என்ற ஊடகமும் இந்தச் சம்பவத்தின் உண்மைப் பின்னணியை வீடியோ செய்தியாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் மீதான கோபத்தால் மக்கள் நடத்திய தாக்குதலை, மத ரீதியான தாக்குதலாகச் சித்தரித்துத் தவறான தகவல்கள் பரப்பப்படுவது உறுதியாகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவில், வங்கதேசத்தில் இந்துப் பெண் ஒருவரின் வீடு இடிக்கப்பட்டதாகவும், அதை எதிர்த்து அவர் குழந்தையுடன் போராடியதாகவும் பரப்பப்படும் காணொலி முற்றிலும் தவறானது. உண்மையில், திருட்டுப் புகாரில் சிக்கிய இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான இரண்டு வீடுகளே இடிக்கப்பட்டுள்ளன.