Fact check: நடிகர் விஜய்யை கூட்டணிக்கு அழைத்தாரா நாம் தமிழர் கட்சியின் சீமான்?

நடிகர் விஜய்யை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டணிக்கு அழைத்ததாக நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகம் செய்தி வெளியிட்டதாக அதன் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
விஜய்யை கூட்டணிக்கு அழைத்த சீமான் என்று வைரலாகும் நியூஸ்கார்ட்
விஜய்யை கூட்டணிக்கு அழைத்த சீமான் என்று வைரலாகும் நியூஸ்கார்ட்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில், “விஜயை கூட்டணிக்கு அழைக்கும் சீமான்: விஜய் விரும்பினால் 2026 ல் சேர்ந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க நாதக தயாராக உள்ளது. நான் முதல்வர்; தம்பி விஜய் துணை முதல்வர்; புஸ்ஸிக்கு வேண்டுமானால் நிதித்துறை தருகிறோம்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக பிப்ரவரி 2ஆம் தேதியிட்ட நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று தெரியவந்தது. நியூஸ் கார்டின் உண்மைத்தன்மையை கண்டறிய பிப்ரவரி 2ஆம் தேதி நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ள நியூஸ் காடுகளை அதன் சமூக வலைதள பக்கங்களில் தேடினோம். அதில், வைரலாகும் நியூஸ் கார்டில் இருப்பது போன்ற எந்த ஒரு செய்தியையும் அவர்கள் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது.

அன்றைய தேதியில் விஜயின் கட்சி குறித்து சீமான் கருத்து தெரிவித்திருந்தார். அதனை நியூஸ் கார்டாக வெளியிட்டிருந்தது நியூஸ் 18 தமிழ்நாடு. அதிலும், “தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் நன்றாக இருக்கிறது, வரவேற்கிறேன்; பெயரில் திராவிடம் என்று இல்லாததே பெரிய மாறுதல்தான்; அவருக்கான வாக்காளர்கள் அவருக்கு, எனக்கான வாக்காளர்கள் எனக்கு” என்றே கூறியுள்ளார். தொடர்ச்சியாக, நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் நடத்தப்பட்ட என்ஐஏ சோதனையை கண்டித்து சீமான் வெளியிட்டுள்ள கண்டனம் குறித்த நியூஸ் கார்டும் அன்றைய தேதியில் வெளியிடப்பட்டுள்ளது.

இரு வேறு நியூஸ்கார்டுகள்
இரு வேறு நியூஸ்கார்டுகள்

மேலும், “வைரலாகும் நியூஸ் கார்ட் போலியானது என்றும் அதனை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிடவில்லை” என்றும் நியூஸ் 18 தரப்பில் இருந்து சவுத்செக்கிற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, சீமான் விஜயுடன் கூட்டணி வைப்பது குறித்து கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தினமலர் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் காணொலி வெளியிட்டிருந்தது. அதன்படி, “நாங்கள் இருவரும் இணைந்து இயங்குவதில் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் இணைந்து இயங்குகிறோம். 

விஜய் அவரது கட்சி மற்றும் கொள்கைகளை அறிவிக்க வேண்டும். அவர்தான் என்னுடன் வரவேண்டுமா இல்லையா என்று முடிவு எடுக்க வேண்டுமே தவிர, நான் அவரிடம் சென்று பேச முடியாது. மேலும், விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது சீமானுடன் கூட்டணி வைப்பீர்களா என்று விஜய்யிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்புங்கள்” என்றும் கூறியுள்ளார்.

Conclusion:

நம் தேடலின் முடிவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விஜய்யை கூட்டணிக்கு அழைத்ததாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டதாக வைரலாகும் நியூஸ் கார்ட் போலி என்றும் அவ்வாறான கருத்தை சீமான் தெரிவிக்கவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in