“அரிய காணொளி... "சுதந்திர போராட்டத்தில் நான் ஈடுபடவே இல்லை.மாறாக எதிர்த்தேன். நேரு ஆங்கிலேய பத்திரிக்கையாளருக்கு பேட்டி கொடுக்கிறார். நேரு அவர்களே ஒப்புக்கொண்டது இதுதான் உண்மை நான் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை. அப்போது பத்திரிக்கையாளர் கேட்கிறார் மகாத்மா காந்தி…” என்ற கேப்ஷனுடன் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பத்திரிக்கையாளருக்கு அளித்த நேர்காணல் ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் காணொலி எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொளியின் குறிப்பிட்ட பகுதியைக் கொண்டு கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Prasar Bharati Archives 2019ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி, “1964ஆம் ஆண்டு மே மாதம் ஜவஹர்லால் நேரு தொலைக்காட்சிக்கு அளித்த கடைசி நேர்காணல்” என்ற தலைப்பில் வைரலாகும் காணொலியின் முழுநீள பதிவை பதிவிட்டிருந்தது.
அதனை ஆய்வு செய்ததில், 14:50 பகுதி தொடங்கி 15:45 முதல் வைரலாகும் பகுதி இடம்பெற்றுள்ளது. அதில், நேரு முஸ்லீம் லீக்கின் முக்கிய தலைவரான முகமது அலி ஜின்னாவைக் குறிப்பிடுவதைக் காணலாம். அதன் 14:35 பகுதியில், நேர்காணல் எடுப்பவர், “நீங்களும் மிஸ்டர் காந்தி மற்றும் ஜின்னா ஆகிய அனைவரும் சுதந்திரம் மற்றும் பின்னர் பிரிவினை காலகட்டத்தில் ஈடுபாடோடு இருந்துள்ளீர்கள்.... இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டீர்கள்” என்று கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு பதிலளிக்கும் நேரு, “திரு. ஜின்னா சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவே இல்லை. உண்மையில், அவர் அதை எதிர்த்தார். முஸ்லீம் லீக் 1911ல் தொடங்கப்பட்டது என்று நினைக்கிறேன். இது உண்மையில் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது, அவர்களால் ஊக்குவிக்கப்பட்டு, பிரிவுகளை உருவாக்கி, அவர்கள் ஓரளவு வெற்றி பெற்றனர். இறுதியில், பரிவினை ஏற்பட்டது” என்கிறார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, நேருவின் நேர்காணல் காணொலியில், “ஜின்னா சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவில்லை” என்று நேரு கூறும் பகுதியை எடிட் செய்து அவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று கூறியதாக தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.