

மின் கம்பிகளில் உரசுவதைத் தவிர்க்க, பனை மரக் கிளைகள் வெட்டப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) தற்போது வைரலாகி வருகிறது. இது திமுக ஆட்சியில் நடைபெற்றது என்று கூறி பரப்பி வருகின்றனர்.
Fact check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
மின் கம்பிகள் உரசாமல் இருப்பதற்காக திமுக அரசு பனை மரக் கிளைகளை வெட்டியதாகப் பரவும் காணொலியின் உண்மைத்தன்மையை அறிய நாங்கள் ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தபோது, இந்த காணொலி வங்கதேசத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. கடந்த டிசம்பர் 14ஆம் தேதியன்று ரோஹன் கான் ரைஹான் என்பவர், வங்கதேசத்தின் நவ்கான் மாவட்டத்தில் மின் கம்பிகளுக்காகப் பனை மரங்கள் வெட்டப்படுவதை வேதனையுடன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அவர் தனது பதிவில், அதிகாரிகள் மின் கம்பிகளைக் காக்க மரத்தின் மேற்பகுதியை வெட்டி விடுவதாகவும், இதனால் மரங்கள் மீண்டும் வளர்வது கடினம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பான செய்திகள் வங்கதேச ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. எனவே, வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட காணொலியை வைத்து, தமிழ்நாட்டில் மின் கம்பிகளுக்காகப் பனை மரங்கள் வெட்டப்பட்டதாகப் போலியான தகவலைப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் திமுக ஆட்சியில் மின் கம்பிகள் உரசாமல் இருக்க பனை மரக் கிளைகள் வெட்டப்பட்டதாக வைரலாகும் காணொலி பங்களாதேஷில் எடுக்கப்பட்டதாகும்.